அதிகரிக்கும் குற்றங்கள்… காவல்துறையின் தோல்வியா?
தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கை, அங்கு செயல்படும் காவல்துறைக்கு மாற்றாக தனியார் பாதுகாப்பு துறையை வளரச் செய்துள்ளது.
கடந்தாண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் 75 கொலைகள் மற்றும் 400 கொள்ளை நிகழ்வுகள் பதிவுவாகியுள்ளன.
ஆப்பிரிக்காவின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா, உலகளவில் அதிக வன்முறைகள் நிகழ்கிற நகரங்களில் முதன்மையான இடத்தில் உள்ளது.
குற்றங்களுக்கு எதிரான போரில் தென்னாபிரிக்கா காவல்துறை தோல்வியடைந்து வருவதாகவும் அதுவே தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் வளர காரணமாகவுள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் காவல் அதிகாரியும் இப்போது பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருபவருமான ஆன்டன் கோயன், “இந்தச் சூழல் மோசமாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் கொலை விகிதம் அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்க நீதியமைப்பு தோல்வியடைந்ததே இந்தளவு வன்முறைக்கு காரணம்” எனத் தெரிவித்தார்.
இந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பயனர்களிடமிருந்து மாதக் கட்டணம் பெற்று கொள்கின்றனர்.
மக்களின் இருப்பிடங்களின் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு ரோந்துகளில் ஈடுபடுகிறார்கள். கார் தொலைந்தால் அதனை தேடி மீட்டுக் கொடுக்கின்றனர். இதனால் திருடர்களுக்கும் இவர்களுக்கும் கடுமையான துரத்தல்களும் சண்டைகளும் நடைபெறுகின்றன. இவர்கள் ஆயுதங்களைத் தாங்கியுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய ஸ்கூட்டர் செய்தியைப் பார்க்கும் தனியார் பாதுகாப்பு அலுவலர் | AP
5 லட்சத்துக்கும் அதிகமான தனியார் பாதுகாவலர்கள் தற்போது செயல்பட்டு வருவதாகவும் இந்த எண்ணிக்கை தென்னாப்பிரிக்காவின் காவல் மற்றும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாதுகாப்பு துறையின் வளர்ச்சியால் தென்னாப்பிரிக்காவின் நடுத்தர மற்றும் அதற்கும் கீழான சமூக நிலையில் உள்ள மக்களுக்கு எந்தவகையிலும் பயனில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.
தென்னாப்பிரிக்கா காவல்துறை 10 ஆயிரம் அதிகாரிகளை புதிதாக 2024-ல் நியமித்திருப்பதாக தெரிவிக்கிறது.
இருந்தபோதும் ஒட்டுமொத்த காவலர்களின் எண்ணிக்கை 6 கோடி மக்கள் கொண்ட நாட்டில் பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொள்வதற்கு மிகக் குறைவு என்கிறார்கள் வல்லுநர்கள்.