சீன தொழிற்சாலைகளை ஆளும் ரோபோக்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!!
உலகளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருந்தாலும், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இணையாக நேருக்கு நேர் போட்டிப்போடும் நாடாகச் சீனா உள்ளது.
ஆனால், சீனாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தில் தொய்வு, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு, உற்பத்தியில் விலையை குறைக்க முடியாத கடினமான சூழ்நிலை, சர்வதேசச் சந்தையில் சீனாவின் போட்டித்தன்மைக்கு பாதிப்பு என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் தீர்வாக தொழிற்துறையில் அதிகப்படியான ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என, அந்நாட்டின் 5 ஆண்டு திட்டத்தில் சீன அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்குப் பின்பு சீனாவில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது.
ஆய்வு: அமெரிக்காவில் இயங்கி வரும் தனியார் திங்க் டேங்க் அமைப்பான தகவல் தொழில்நுட்ப மற்றும் புதுமை நிறுவனம் (ITIF) அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. சீனாவின் தொழிலாளர் படையில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் 12.5 மடங்கு அதிகமான ரோபோக்கள் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனா முன்னோடி: இதன் மூலம் உலகிலேயே வேக வேகமாகத் தொழிற்சாலை ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்களை நிறுவும் நாடாக சீனா உயர்ந்துள்ளது என ITIF அமைப்பின் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே AI மூலம் டெக் ஊழியர்களைப் பயமுறுத்தியிருக்கும் வேளையில் தற்போது இண்டஸ்ட்ரீஸ் ஆட்டோமேஷன் ரோபோ கூடுதல் அச்சத்தை உற்பத்தி துறையில் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் திடீர் அதிகரிப்பு: சீன உற்பத்தி துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, சீனாவில் தற்போது 12.5 மடங்கு அதிகமான ரோபோட்களைப் பயன்படுத்தி வருகிறது. இது 2017 ஆம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 1.6 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவின் பின்தங்கிய நிலை: அதே சமயம், அமெரிக்கா தனக்குத் தேவையான ரோபோக்கள் எண்ணிக்கையில் வெறும் 70 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இது, அமெரிக்க உற்பத்தி துறையில் ஆட்டோமேஷனில் மந்த நிலையை காட்டுகிறது.
எதிர்காலம் என்ன நடக்கும்?: ITIF அறிக்கையின் படி, சீன ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் தற்போது இன்னோவேஷன் பிரிவில் முன்னோடி இல்லாவிட்டாலும், அவை விரைவில் முன்னேறிச் சிறந்த நிலையை எட்டக்கூடும் என்று எச்சரிக்கிறது. மேலும் சீன தொழிற்சாலை தற்போது அளவுக்கு அதிகமான ஆட்டோமேஷன் செய்யப்பட்டு வருகிறது
விளைவு: இது, உலகளவில் ரோபோக்கள் மற்றும் ஆட்டோமேஷன் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்தை பிடிக்கும் என்பதையே காட்டுகிறது. இதன் விளைவாக, உற்பத்திச் செலவைக் குறைத்து, சர்வதேச சந்தையில் போட்டித்திறனை அதிகரிக்கச் சீன நிறுவனங்களுக்கு இது உதவும். ஆனால், இதனால் சீனாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து, சமூகப் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
சீன அரசின் ஆதரவு: சீன அரசும் ரோபோட்டிக்ஸ் துறைக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வரும் காரணத்தால் வேகமாகவும், அதிகமாக ஆட்டோமேஷன் ரோபோக்களை சீனாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.