“ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது”.. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக தனது கேப்டன்சியில் ஆடப் போவது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அது ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பத்து ஆண்டுகள் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கடந்த சில மாதங்கள் முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு அழைத்து வந்து அவரை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ். இந்த கேப்டன்சி மாற்றத்தில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா தனக்கு கீழ் ஆடுவது எந்த வகையிலும் விசித்திரமாகவோ, வித்தியாசமாகவோ இருக்காது. அது நல்ல அனுபவமாக இருக்கும் என கூறி இருந்தார். அது ரோஹித் சர்மா ரசிகர்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.
அந்த பேட்டியில், “முதலில் அது (ரோஹித் சர்மா எனது கேப்டன்சியில் ஆடுவது) எந்த வகையிலும் வித்தியாசமாக இருக்காது. அவர் எனக்கு உதவி தேவைப்பட்டால் உதவி செய்யப் போகிறார். அவர் இந்திய அணியின் கேப்டன். அது எனக்கு பல வகையில் உதவும். இந்த அணியில் அவர் என்ன சாதித்து இருக்கிறாரோ அதை நான் தொடர்ந்து எடுத்துச் செல்ல இருக்கிறேன்.” என்றார் ஹர்திக் பாண்டியா.
மேலும், ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக தனது கேப்டன்சியில் ஆடுவது குறித்த கேள்விக்கு, “அது எந்த வகையிலும் விசித்திரமாகவோ, வித்தியாசமாகவோ இருக்காது. அது நல்ல அனுபவமாக இருக்கும். அவர் எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார் என எனக்கு தெரியும்.” என்றார் ஹர்திக் பாண்டியா.
பாண்டியாவின் இந்த பேட்டியில் ரோஹித் சர்மா குறித்து தவறாக பேசாத போதும் ரோஹித் சர்மா தனக்கு கீழ் ஆடுவது எந்த வகையிலும் வித்தியாசமாக இருக்காது. அது நல்ல அனுபவமாக இருக்கும் என அவர் கூறியதை ரோஹித்தின் ரசிகர்கள் விரும்பவில்லை. அதை சுட்டிக் காட்டி சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அவர்கள் கருத்துக்கள் மற்றும் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.