“ரோகித் அந்த முடிவ மட்டும் எடுக்காதிங்க.. உங்க டீம்க்கு சிக்கலாயிடும்” – ஹர்பஜன் சிங் கோரிக்கை
முதல் டெஸ்ட் போட்டியில் உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான திட்டங்களோடு வந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயச் சூழல் நிலவுகிறது.
அதே சமயத்தில் ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் தற்போது காயத்தால் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் விலகி இருப்பது, இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டை மிகவும் பலவீனமானதாக மாற்றுகிறது.
இங்கிலாந்து அணியின் 2011 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி தோற்றது. இதற்கு அடுத்து மீதிப் போட்டிகளுக்கு முதல் நாளின் முதல் பந்தில் இருந்தே பந்து திரும்பும் அளவுக்கு ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டன. இது அப்போது பெரிய சர்ச்சையாக மாறியது.
எனவே இப்பொழுதும் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று இருக்கும் இந்திய அணி அடுத்த நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு சுழற் பந்துவீச்சுக்கு மிக மிகச் சாதகமாக இருக்கும் ஆடுகளங்களை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அனுபவமற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் இதில் பாதிக்கப்படுவார்கள், மேலும் இந்திய அணி தோற்கவும் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக இருந்தால், இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்கும். பும்ரா ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளராக இருப்பார்.
ஆனால் ஹைதராபாத்தில் இருந்ததை விட இங்கு ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என்று உண்மையில் நம்புகிறேன். இந்தியாவிடம் இளம் பேட்ஸ்மேன்கள் கொண்ட யூனிட் இருக்கிறது. எனவே அவர்களுக்கு ரன்கள் எடுக்க இப்படியான விக்கெட்டுகள் அமைத்து ஒரு வாய்ப்பு தர வேண்டும். நல்ல ஆடுகளம் இருந்தால்தான் இந்தியாவுக்கு அது நல்ல முடிவுகளை கொடுக்கும்.