Rohit Sharma: “கப்பு முக்கியம் பிகிலு” – ஜூனியர் வீரர்களுக்கு வாழ்த்துகளை தட்டி விட்ட ரோகித் சர்மா

அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ‘Go well, boys! ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த இரண்டு இறுதிப் போட்டிகளுக்கும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றவர் கேப்டன் ரோகித் சர்மா. இவரது தலைமையிலான இந்திய அணியை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி உலக மகுடம் சூடியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் மோதுகின்றது எனத் தெரிந்தவுடன், ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஜூனியர் அணியை இந்திய ஜூனியர் அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய ஜூனியர் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை ஹாரி டிக்ஸன் மற்றும் சாம் ஹான்ஸ்டஸ் ஆகியோர் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன்கள் சேர்க்கவேண்டும் என நினைத்து தேவையற்ற ஷாட்களை தவிர்த்து வந்தனர். ஆனால் 8 பந்துகளை எதிர்கொண்ட சாம் தனது விக்கெட்டினை ராஜ் லிம்பானி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.