ஓபனாக விளாசிய ரோஹித் சர்மா.. மிரண்டு போன ஸ்ரேயாஸ் ஐயர்.. 24 மணி நேரத்தில் பல்டி.. என்ன நடந்தது?
மும்பை : இந்திய வீரர்கள் சிலர் டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு ஏன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா நேற்று பேசி இருந்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்த கருத்தை கூறி இருந்தார். மறைமுகமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனைத் தான் ரோஹித் சர்மா குறிப்பிடுகிறார் என பலரும் கூறி வந்தனர்.
இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தாமாகவே தொடரில் இருந்து விலகினார். அதன் பின் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க ஆர்வம் காட்டாமல் ஐபிஎல் தொடருக்கு தயாராக வேண்டி பயிற்சி செய்து வந்தார். மறுபுறம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்காததால் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அதன் பின் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அவர்கள் இருவரையும் டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் எனக் கூறியும் அவர்கள் இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா கடுமையாக பேசினார். டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆர்வம் காட்டதவர்களுக்கு அணியில் ஏன் அணியில் இடமளிக்க வேண்டும் என அவர் பேசி இருந்தார்.
இதை அடுத்து 24 மணி நேரத்திற்குள் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முடிவை மாற்றிக் கொண்டு ரஞ்சி தொடரில் ஆட தயாராகி இருக்கிறார். மும்பை மாநில வீரரான அவர், ரஞ்சி கோப்பை அரை இறுதியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் ஆட இருக்கிறார். இஷான் கிஷன் ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடவில்லை என்றாலும் தற்போது டி.ஒய் பாட்டில் எனும் டி20 தொடரில் ஆடி வருகிறார். அவருக்கு இனி டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பையில் ரன் குவித்தால் மட்டுமே எதிர்காலத்தில் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியும்.