ஓசூர்-க்கு வந்த ரோல்ஸ் ராய்ஸ் தொழிற்சாலை.. வேற லெவல் திட்டம்.. செம ஜாக்பாட்..!!
இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி கனவிற்குத் தமிழ்நாடு பெரும் பலத்தைச் சேர்க்கிறது. தமிழ்நாட்டில் வேகமாக வளர்த்து வரும் டிபென்ஸ் காரிடார் ஆக விளங்கும் ஓசூர் பகுதியில் ரோல்ஸ் ராய்ஸ் புதிய தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் என்றால் பெரும்பாலானோருக்கு அதனுடைய கார் தான் நினைவுக்கு வரும், ஆனால் உண்மையில் ரோல்ஸ் ராய்ஸ் விமானத்திற்கான இன்ஜின் தயாரிப்பதில் தான் அதிகப்படியான பணத்தைச் சம்பாதிக்கிறது. கார் தயாரிப்பு, கார் விற்பனையெல்லாம் சைட் பிஸ்னஸ் தான்.
இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் ஓசூரில் மத்திய அரசு நிறுவனமான HAL உடன் இணைந்து ஏரோ இன்ஜின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களைத் தயாரித்து, உலகளவில் இருக்கும் அதன் இன்ஜின் கட்டமைப்புத் தளத்திற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் – HAL மத்தியிலான கூட்டணி நீண்ட காலமாக இருந்தாலும் தற்போது ஓசூரில் புதிய தொழிற்சாலை அமைப்பது மூலம் ஓசூர் டிபென்ஸ் காரிடார் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேளையில் ஓசூரை இன்ஜின் உற்பத்தி தளமாக மாற்றும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
IAMPL நிறுவனம் 2010ல் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் HAL இடையே 50:50 கூட்டணியில் உயர் துல்லியமான ஏரோ இன்ஜின் கம்ப்ரசர், கேஸ் டர்பைன் பாகங்கள் தயாரிப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
இந்தக் கூட்டணி நிறுவனம் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் அமைந்துள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு, ரோல்ஸ் ராய்ஸின் சிவில் ஏரோ என்ஜின்களில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 200 பாகங்களை இக்கூட்டணி தயாரித்து வழங்கி வருகிறது.
ஓசூரில் புதிய ஆலை அமைக்கும் நிர்வாகப் பணிகள் கடந்த 6 மாதங்களாக வேகமாக நடந்து வரும் வேளையில், தற்போது பூமி பூஜை செய்யப்பட்டு உள்ளது. இதன் கட்டுமான பணிகள் 2024-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசூர் தொழிற்பேட்டையில் ரோல்ஸ் ராய்ஸ் ஆலை செயல்படத் தொடங்கினால், அதனுடன் தொடர்புடைய பல தொழில்களும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரோல்ஸ் ராய்ஸ் ஏரோ இன்ஜின் தயாரிப்பில் இருக்கும் பிற நாட்டு சப்ளையர்களும் ஓசூரில் தொழிற்சாலை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஓசூரில் 3,000க்கும் மேற்பட்ட பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தொழிற்சாலைகள் உள்ளன, இதில் அதிகப்படியான தொழிற்சாலைகள் ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்தது. ஓசூர்-கிருஷ்ணகிரி பெல்ட்டை ஒரு டிபென்ஸ் காரிடார் ஆகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, இது எதிர்காலத்தில் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.