ஷாட்கன் 650 பைக்கின் டெலிவரியை தொடங்கியது ராயல் என்ஃபீல்டு.. இந்தியாவுலேயே முதல் ஆளா வாங்கிய நபர்..
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்பீஃல்டு ஷாட்கன் 650 (Royal Enfield Shotgun 650) பைக்கின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமே 25 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் முதல் யூனிட்டே தற்போது டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் சமீபத்தில் ஷாட்கன் 650 (Shotgun 650) எனும் அதன் புதுமுக பைக்கை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பொங்கல் (ஜனவரி 15) தினத்திலேயே அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக சென்ற ஆண்டின் இறுதியில் கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் வைத்து இந்த பைக்கை நிறுவனம் காட்சிப்படுத்தியது.
இதுவே அந்த பைக்கை முழுமையாக ராயல் என்ஃபீல்டு காட்சிப்படுத்தியது முதல் முறையாகும். மேலும், இந்த நிகழ்வை அலங்கரிக்கும் பொருட்டு சுமார் 25 யூனிட்டுகளுக்கான புக்கிங்கை மட்டுமே ஏற்றது. அதுவும், மோட்டோவெர்ஸ்-இல் பங்கேற்றவர்களால் மட்டுமே அதை புக் செய்துக் கொள்ள முடியும் என்றும் அது அறிவித்தது.
மேலும், புக் செய்தவர்களில் 25 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விரைவில் டெலவிரி வழங்கப்படும் என்றும் அப்போது அறிவித்திருந்தது. இந்த பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றன. ஆமாங்க மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பைக்கை புக்கிங் செய்தவர்களுக்கே ஷாட்கன் 650 பைக்கை டெலிவரி கொடுக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.
25 யூனிட்டில் முதல் யூனிட்டையே ராயல் என்ஃபீல்டு தற்போது டெலிவரி வழங்கி இருக்கின்றது. சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கே முதல் யூனிட் ஷாட்கன் 650 பைக் டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. குலுக்கல் முறையிலே இந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கிரேடியன்ட் வகை பெயிண்ட் பூச்சினாலேயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதனை ஃப்யூவல் டேங்கில் நம்மால் தெளிவாக பார்க்க முடிகின்றது. டீப் ப்ளூ மற்றும் டீப் பிளாக் ஆகிய நிறங்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பெயர்களுக்கு நியான் கிரீன் நிறத்தை ராயல் என்பீல்டு பயன்படுத்தி இருக்கின்றது.
இவை அனைத்தும் பைக்கிற்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், பைக்கின் எஞ்ஜின் மற்றும் முன் பக்க ஃபெண்டரில் கருப்பு ஃபியானோ கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டும். ஃப்யூவல் டேங்க், சைடு பாடி பேனல் மற்றும் பின் பக் ஃபெண்டர் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தாலேயே அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு முதல் லாட்டாக தயாரிக்கப்பட்ட ஷாட்கன் 650-யின் 25 யூனிட்டுகளுமே தனித்துவமான வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இதனாலேயே இதன் விலை சற்று அதிகமாக உள்ளது. ரூ. 4.25 லட்சம் என்றே இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆன்-ரோடில் இந்த ஒற்றை பைக்கிற்காக சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் ரூ. 4.91 லட்சத்தை வழங்கி இருக்கின்றார்.
அதேவேளையில், வழக்கமான ஷாட்கன் 650 பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 3.59 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஷீட்மெட்டல் கிரே தேர்வின் விலையே இது ஆகும். இதற்கு அடுத்தபடியான இடத்தில் கிரீன் டிரில் நிற தேர்வு உள்ளது. இதன் விலை ரூ. 3.70 லட்சம் ஆகும். மூன்றாவது தேர்வு பிளாஸ்மா ப்ளூ ஆகும்.
இதன் விலை ரூ. 3.73 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. 648 சிசி பாரல்லல் ட்வின் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎஸ் மற்றும் 52.3 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.