எலெக்ட்ரிக் புல்லட் பைக்கை தமிழகத்தில் தயாரிக்க ராயல் என்ஃபீல்டு முடிவு!ரூ3000 கோடியை முதலீடு செய்ய முடிவு!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 3000 கோடியை முதலீடு செய்து தனது புதிய தயாரிப்புகளை கொண்டு வரவும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து உள்ளது. தமிழக முதல்வர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு சார்பில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தில் ரூபாய் 3000 கோடியிலான முதலீட்டை கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து செய்துள்ளனர். இதன்படி ஏற்கனவே தமிழகத்தில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து வரும் நிறுவனம் அதை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முதலீட்டின் மூலம் 2000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 3000 கோடி முதலீடு என்பது அடுத்த 8ஆண்டுகளுக்குள் தமிழகத்திற்குள் வரும் என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த புதிய முதலீட்டை வைத்து அந்நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்ற தகவலையும் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி நிறுவனம் புதிய தயாரிப்புகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் தயாரிப்பு மேம்பாடு தயாரிக்கும் கொள்ளளவை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக இது செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு இதுவரை இல்லாத ஆலையை அமைக்கவும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து தற்போது பயன்பாட்டில் இல்லாத ஆலையை புரனமைத்து மீண்டும் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ கோவிந்தராஜனும், தமிழக தொழிற்சாலை துறை செயலாளர் அருண் ராயும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம் செய்தனர். அப்பொழுது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ தமிழகம் என்பது எங்களது வீடு போன்றது. எங்களது இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகள் எல்லாம் பல ஆண்டுகளாக இங்கிருந்து தான் தயாரிக்கப்படுகிறது என கூறினார்.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு நிறுவனத்திற்கு கட்டுமான சப்போர்ட் இடைவிடாத பவர் சப்ளை மற்றும் ஒழுங்கு அமைப்பு வசதிகள் உள்ளிட்ட மற்ற அத்தியாவசிய தேவையான கட்டுமான வசதிகளை எல்லாம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை விரிவுபடுத்த தமிழகத்தை தேர்வு செய்து அங்கு உள்ள ஆலையை விரிவு படுத்த முடிவு செய்துள்ளது தெளிவாக தெரிகிறது..
இது மட்டுமல்ல ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் தமிழகத்தில் தயாராக போவது தற்போது நமக்கு உறுதியாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு புல்லட் எலெக்ட்ரிக் பைக் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் வருகையை ராயல் என்ஃபீல்டு ரசிகர்களால் பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான அதிகமாகி வரும் நிலையில் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் மார்க்கத்திலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் என்பது ஈஷர் மோட்டார் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கிறது. இதனால் ஈச்சர் மோட்டார் நிறுவனமும் கனரக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படி என்றால் கனரக எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து வாகனங்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.