ஓசூர் ஓலா ஃபேக்ட்ரியில் இந்த சிறுவனுக்கு மட்டும் ராஜ மரியாதை! எதற்காக தெரியுமா? ஒரு வீடியோ இப்படி மாத்திடுச்சு
ஆக்ராவை சேர்ந்த 4 வயது மட்டுமே ஆன சிறுவன் ஒருவன் ஓசூரில் உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையை நேரில் பார்வையிடும் வாய்ப்பை பெற்றுள்ளான். யார் இந்த சிறுவன்? இவனுக்கு மட்டும் எவ்வாறு இந்த வாய்ப்பு கிடைத்தது? என்பதை பற்றி இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சிறுவன் குஷ்னவ் கிர்வார். 4 வயது மட்டுமே ஆன இந்த சிறுவன் பாடல்கள் பாடி வீடியோக்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளான். இந்த நிலையில், குஷ்னவ் கிர்வாரின் எக்ஸ் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு உள்ளது.
அந்த வீடியோவில், சிறுவன் குஷ்னவ் கிர்வார் பாட்டு பாடியவாறு நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலில், இடையிடையே “ஓலா எலக்ட்ரிக்” மற்றும் “ஓலா டேன்ஸ்” உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்று இருப்பதை கேட்க முடிகிறது. மேலும், இந்த வீடியோ உடன் இந்த எக்ஸ் பதிவில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீது அமர்ந்திருக்கும் படங்களையும் குஷ்னவ் கிர்வார் பதிவிட்டுள்ளான்.
சிறுவன் குஷ்னவ் கிர்காரின் இதுதொடர்பான எக்ஸ் பதிவில், “பாவிஷ் அங்கிள், ஆக்ராவில் இருந்து நான் ராக் ஸ்டார் குஷ்னவ். ஓலா ஃபியூச்சர் ஃபேக்டரிக்கு சென்றீர்களா? என்னையும் அழைத்துச் செல்லுங்கள்” என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கையும், நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வாலையும் மென்ஷன் செய்து கேட்டுள்ளான்.
சிறுவன் குஷ்னவ் கிர்காரின் இந்த எக்ஸ் பதிவை கண்ட பாவிஷ் அகர்வால், “குஷ்னவ் உங்கள் அசைவுகளை ரசித்தேன். ஓலா மற்றும் எங்கள் ஃபியூச்சர் ஃபேக்டரிக்கான உங்கள் உற்சாகத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குஷ்னவ் வாருங்கள், உங்கள் வருகையை திட்டமிடுவோம்! உங்கள் பெற்றோர்கள் எல்லா வேடிக்கைகளையும் தவறவிடாமல் இருக்க அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!” என அவனது பதிவை மென்ஷன் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை நமது தமிழ்நாட்டில், ஓசூரில் உள்ளது. இந்தியாவின் மிக பெரிய இவி தொழிற்சாலை, உலகிலேயே பெண் தொழிலாளர்கள் அதிக பேர் பணியாற்றும் இவி தொழிற்சாலை என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் ஓலாவின் இந்த தொழிற்சாலைக்கு உள்ளது.
பெண்களை தொழிற்சாலையில் பணியமர்த்துவது மட்டுமின்றி, அவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கி, அவர்களது திறன்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மேம்படுத்துகிறது. இன்னும் இந்த பிரம்மாண்ட தொழிற்சாலை முழு வேகத்தில் செயல்பட துவங்கவில்லை. ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலையின் முழு உற்பத்தி திறன் ஆனது வருடத்திற்கு 1 கோடி வாகனங்கள், அதாவது ஒரு வருடத்தில் அதிகப்பட்சமாக 1 கோடி வாகனங்களை உற்பத்தி செய்யலாம் என கூறப்படுகிறது.
ஆதலால், இன்னும் பல வருடங்களுக்கு புதிய தொழிற்சாலையை கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஓலா நிறுவனத்துக்கு இல்லை. இதனால்தான் என்னவோ, இந்த தொழிற்சாலைக்கு ஃபியூச்சர் ஃபேக்டரி (எதிர்கால தொழிற்சாலை) என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பெயர் வைத்துள்ளது. சந்தையில் தற்சமயம் எஸ்1 எக்ஸ், எஸ்1 ஏர், எஸ்1 புரோ என 3 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.