10 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரத்தை ரூ.7 லட்சமாக மாற்றிய மல்டிபேக்கர் பங்கு – Cantabil Retail
இளைய தலைமுறையினர் தற்போது பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. சரியான நிறுவன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்தால் நல்ல ஆதாயம் ஈட்டலாம் என்பதை இதற்கு காரணம்.
பொதுவாக நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் குறைந்த அளவில் முதலீடு செய்தாலும் அது எதிர்பார்க்காத வருமானம் கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆதாயம் அளித்த பங்குகளில் ஒன்று கான்டாபில் ரீடெயில் இந்தியா.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மல்டிபேக்கர் பங்கில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் தற்போது அது ரூ.7 லட்சமாக உயர்ந்திருக்கும். கான்டாபில் ரீடெயில் இந்தியா நிறுவனம் கான்டாபில் என்ற பிராண்டின்கீழ் ஆடைகள் வடிவமைத்து தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் பார்மல், பார்ட்டி, சாதாரண மற்றும் அல்ட்ரா கேஷுவல் ஆடைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் 500 பிரத்தியேக சில்லரை விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.
இந்தியா முழுவதுமாக இந்நிறுவனத்தில் மொத்தம் 3,700க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கான்டாபில் ரீடெயில் இந்தியா நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.551.72 கோடியும், நிகர லாபமாக ரூ.67.24 கோடியும் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக முறையே ரூ.12.27 கோடி மற்றும் 7.50 கோடி ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கான்டாபில் ரீடெயில் இந்தியா நிறுவன பங்கின் விலை ரூ.257.50ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,102.18 கோடியாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 7,300 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 870 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 5 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது இந்நிறுவன பங்கு இறங்கு முகத்தில் இருந்தாலும் எதிர்காலத்தில் ஏற்றம் காண வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அரிஹந்த் கேபிட்டலின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் மிலின் வாசுதேயோ கூறுகையில், உயர தொடங்கினால் ஒரிரு வாரங்களில் இந்நிறுவன பங்கின் விலை 280-300ஐ தொடும். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.240ஆக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பங்குச் சந்தைகளில் கிடைக்கும் தரவுகளின்படி, இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான 74.97 சதவீத பங்குகள் புரோமோட்டர்ஸ் வசம் உள்ளது. அதேவேளையில், எஞ்சிய 25.03 சதவீத பங்குகளை பொது பங்குதாரர்கள் கொண்டுள்ளனர்.