வங்கி கணக்குக்கு ரூ.2000 ரொக்கம் … பி.எம்.கிசான் பயனாளிகள் இதை கண்டிப்பா செய்யணும்
பி.எம்.கிசான் பயனாளிகள் 16-வது தவணை தொகையினை பெறுவதற்கு e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ”பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6,000/- மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மூன்று கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் மொத்தமாக ரூ. 53,600 கோடி நிதியாகப் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம் :
நடப்பாண்டில் 16-வது தவணையைப் பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இதற்கான, கடைசி தேதி 31.01.2024 ஆகும். எனவே , தகுதியுள்ள வேளாண் மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எவ்வாறு ஆதார் எண்ணை உறுதி செய்வது
பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தங்களாகவே ஆதார் எண்ணை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.
1.உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை யைத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில்
(a). ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது
(b). பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
2. உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.