சீனா எல்லையில் சாலைகள் அமைக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு! மத்திய அரசின் திட்டம் என்ன?

சீனா அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழைவது பெரும் பிரச்னையாக இருப்பது மட்டும் அல்லாமல், இரு நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ தலைவர்கள் பல வருடங்களாக இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் முழமையான தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியா, சீனா எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு, தற்போது உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறது.

மத்திய அரசு தற்போது எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது, எல்லையில் போக்குவரத்தை எளிதாக்கும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இதற்காக சாலைகள் அமைக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

எல்லையில் ரூ.6000 கோடிக்கு சாலைகள்: சீனாவுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்தவும் அப்பகுதிகளில் உள்ள சாலை இணைப்புகளை மேம்படுத்தவும் இந்தியா – திபெத் – சீனா – மியான்மர் எல்லை வழியே செல்லும் அருணாச்சல பிரதேசத்தின் பிரதான நெடுஞ்சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 11 வெவ்வேறு சாலை தொகுப்புகளுக்கு மத்திய அரசு சுமார் 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநில பொதுப்பணித்துறை, எல்லையோர சாலை அமைப்பு , தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச எல்லைக்கு அருகில் சாலைகள்: 1,748 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த இரு வழி நெடுஞ்சாலை சர்வதேச எல்லையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் . இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கும் என்றும், ஒவ்வொரு கட்டங்களாக பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அருணாச்சல பிரதேசத்திலும் வடகிழக்கு மாநிலத்திலும் செயல்படுத்தப்படும் 400 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பெரிய சாலை திட்டத்திற்கான ஏலம் விடப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படையினருக்கு முக்கியம்: அருணாச்சல பிரதேசத்தில் மேல் பகுதியில் மக்கள் வசிக்காத அல்லது குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளை கடந்து செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த இருவழி நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாம்டிலா – நஃப்ரா – லடா பிரிவு (தொகுப்பு 2,3 ) சாலை பணிகளுக்காக ஞாயிறன்று 2,098.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

இதன் மூலம் 78.3 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. அதே போல தேசிய நெடுஞ்சாலை 913இல் லடா – சார்லி பிரிவு (தொகுப்பு 7) சாலை பணிகளுக்காக 279.91 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் 15.4 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலைகள் எல்லைப் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதையும் இந்த பிராந்தியத்தில் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் இந்த எல்லை நெடுஞ்சாலை, குறிப்பிடத்தக்க நதிப்படுகைகளை இணைக்கும் முக்கியமான சாலை உட் கட்டமைப்புகளை உருவாக்கும் என கூறினார். இதனால் மாநிலத்தில் ஏராளமான நீர்மின் திட்டங்களையும் உருவாக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *