உக்ரைன் மீது ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல்.. 21 பேர் உயிரிழந்த சோகம்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா நடத்தி வரும் போர், ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில், 110-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ட்ரோன்கள், ஏவுகணைகள் என அனைத்து வகையான ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்தியிருப்பதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவமனைகள், மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள், பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், வர்த்தகப் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவும் வகையில், பெருமளவில் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.