வாழைப்பழத்துக்காக இந்தியாவை நாடும் ரஷ்யா.., பின்னணியில் இருக்கும் விவகாரம் என்ன?
ஈகுவடார் நாட்டுடன் ஏற்பட்ட சிக்கலால் வாழைப்பழ இறக்குமதிக்கு இந்தியாவை ரஷ்யா தேர்வு செய்துள்ளது.
என்ன பிரச்சனை?
ராணுவ உபகரணங்களை ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்து வந்த தென் அமெரிக்க நாடான Ecuador, தற்போது அமெரிக்காவிலிருந்து கொள்முதல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் ஈகுவடாரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழ ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
இது குறித்து ரஷ்யாவின் நிறுவனமான Rosselkhoznadzor அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ரஷ்யாவுக்கும், ஈகுவடார் நாட்டிற்கும் ஏற்கனவே முரண்பாடுகள் உள்ளன. மேலும், பழங்களில் பூச்சிகள் இருப்பதால் ஈகுவடார் நாட்டிலிருந்து மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்.
அதோடு, வாழைப்பழ இறக்குமதியையும் நிறுத்தியுள்ளோம். இதனால், ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் இருந்து வாழைப்பழங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன்மூலம், ரஷ்யாவின் சந்தைக்கு இந்திய வாழைப்பழங்களின் வரத்து அதிகரிப்பதோடு, அதன் பயன்பாடும் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ஈகுவடார் நாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வாழைப்பழ தேவை அதிகரித்துள்ளது. இதனால் கணிசமான அளவு உற்பத்தி செய்யும் இந்தியாவில் இருந்து வாழைப்பழத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.
அதோடு, பப்பாளி, கொய்யா, மாம்பழம், அன்னாசி உள்ளிட்டபிற பழங்களையும் இந்தியாவில் இருந்து ரஷ்யா இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகுவடார் நாடு கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக ஈகுவடார் தரப்பில் இருந்து , “ரஷ்யாவிற்கு ஏற்றமதி செய்யப்படும் பொருட்களில் இருந்து 0.3% மட்டுமே பூச்சிகள் இருக்கலாம்.
அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அவ்வாறு இருந்தாலும் அது குறைந்த அளவில் தான் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.