ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 12 மாத வீழ்ச்சி..! காரணம் என்ன?
இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக திகழ்கிறது. இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 85% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. பின்னர் அதனை பெட்ரோல், டீசலாக மாற்றி சுத்திகரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா ரஷ்யா கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்து வந்த நிலையில் திடீரென அது சரிய தொடங்கியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி அதிகரித்தது எப்போது: கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று ரஷ்யா. உக்ரைன் – ரஷ்யா போரினை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த தடையால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் தேங்க தொடங்கியது.
எனவே ரஷ்ய நிறுவனங்கள் பெரும் சலுகைகளை அறிவித்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை வழங்கி வந்தது. தள்ளுபடியுடன் வந்ததால் இந்திய நிறுவனங்களும் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க ஆர்வம் காட்டின.
ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு இறக்குமதி?: ரஷ்யா – உக்ரைன் போருக்கு முன்பு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சந்தையில் ரஷ்யாவின் பங்கு ஒரு சதவீதத்துக்கு குறைவு. அதாவது நாளொன்றுக்கு 44 ஆயிரத்து 500 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது .
ஆனால் போருக்கு பின்னர், ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவு அதிகரித்தது. கடந்தாண்டு மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 21 லட்சம் பீப்பாய்களில் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
கடந்த நவம்பரில் 16 லட்சம் பேரல்கள், டிசம்பரில் 13 லட்சம் பேரல்கள் என இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, ஜனவரியில் 12 லட்சமாக குறைந்துள்ளது.
என்ன காரணம்?: இந்திய நிறுவனங்கள் ஈராக்கிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கி இருப்பு வைப்பதே காரணம் என தெரிய வந்துள்ளது. டிசம்பர் மாதம் நாளொன்றுக்கான ஈராக் கச்சா எண்ணெய் இறக்கும் 9.85 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில் ஜனவரி மாதம் அது 11 லட்சம் என அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தடையும் காரணமா?: அமெரிக்க அரசு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்ய கச்சா எண்ணெயை கப்பலில் கொண்டு வந்து இறக்குமதி செய்வது பெரும் செலவினை ஏற்படுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல ரஷ்ய ஏற்றுமதியாளர்களின் தள்ளுபடி குறைப்பு மற்றும் செங்கடல் தாக்குதல்களால் உயர்ந்த காப்பீடு மதிப்பு ஆகியவற்றையும் காரணமாக குறிப்பிடுகின்றனர்.