ரஷிய விமானங்கள், ட்ரோன்கள் அழிப்பு: உக்ரைன்

ரஷியாவின் போா் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் திங்கள்கிழமை கூறியது.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

உக்ரைனின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலமாகவும், போா் விமானங்கள் மூலமாகவும் ரஷியா ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

எனினும், உக்ரைன் விமானப் படை அந்த போா் விமானங்களையும், ட்ரோன்களையும் சுட்டுவீழ்த்தியது. அந்த வகையில், 2 போா் விமானங்களும், ஈரானில் தயாரிக்கப்பட்ட 28 ஷஹீத் ரக ட்ரோன்களும் அழிக்கப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.

எனினும், ரஷியாவின் தாக்குதலிலோ, சுட்டுவீழ்த்தப்பட்ட விமானச் சிதறல்கள் விழுந்ததிலோ யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை. ஏற்கெனவே, தங்கள் நாட்டில் பறந்து வந்த 3 ரஷிய போா் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் சனிக்கிழமை கூறியது.

இது குறித்து அந்த நாட்டு விமானப் படை வெளியிட்ட அறிக்கையில், கொசான் பகுதி வான் எல்லையில் ரஷியாவின் எஸ்யு-34 ரகத்தைச் சோந்த 3 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரஷியாவின் மேலும் 2 போா் விமானங்களும், 28 ட்ரோன்களும் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தற்போது தெரிவித்துள்ளது. தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இருந்தாலும், உக்ரைனின் தற்போதைய அரசு நேட்டோவில் இணைய ஆா்வம் காட்டி வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *