ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் 2024: 88% வாக்குகளுடன் புடின் வரலாற்று வெற்றி!
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
மீண்டும் ஜனாதிபதியாக புடின்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதோடு, ஐரோப்பாவில் பெரும் பதற்ற நிலையை நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த பொது தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு ஜனாதிபதியாக அதிகபட்ச வாக்குகளை புடின் பெற்றுள்ளார். புடின் சுமார் 87.8% வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக Public Opinion Foundation (FOM) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், The Russian Public Opinion Research Centre (VCIOM) விளாடிமிர் புடினுக்கு 87% வாக்குகளை வழங்கியது.
தற்போது வெளியாகியுள்ள ஆரம்பக்கட்ட முதல் உத்தியோகபூர்வ முடிவுகள், கருத்து கணிப்புகள் துல்லியமானவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளன.
ஆரம்பகட்ட முடிவுகளின் அடிப்படையில் 71 வயதான புடின் சுலபமாக தனது புதிய 6 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்க உள்ளார்.
கேஜிபி லெப்டினன்ட் கர்னல்(KGB lieutenant colonel) ஆக இருந்த விளாடிமிர் புடின் 1999ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார்.
அமெரிக்கா கருத்து
இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் இல்லை என தெரிவித்து வாக்குபதிவின் போது நண்பகலில் ஆயிரக்கணக்கான எதிர் கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடிகளில் போராட்டத்தை நடத்தினர்.
இதற்கிடையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளரும், புடின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார், போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார், எனவே இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் இல்லை என தெரிவித்துள்ளார்.