எஸ்.பி. வேலுமணியை சீண்டும் ‘தீவிரவாதி’ போஸ்டர் – கொதிக்கும் கோவை அதிமுகவினர்..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவின் பவர் சென்டராக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சீண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி மர்ம நபர்கள் வேலுமணி புகைப்படத்தில் ‘தீவிரவாதி’ என்ற வாசகத்தை பதிந்து அந்த போஸ்டரை கோவைப்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துவிட்டது.
சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக வேலுமணியின் வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியிலேயே போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘கோவை அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், மத கலவரத்தை தூண்டும் விதமாகவும், சமூக விரோதிகள் வேலுமணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.’ என கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அதிமுக-வினர்.
தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். தொடர்ந்து குனியமுத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ‘இந்த செயலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். நடவடிக்கை எடுக்காவிடின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அதிமுகவினர் கூறியுள்ளனர்.