S.P.Velumani : எஸ்.பி வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி எனும் போஸ்டர்.! ஒட்டியது யார்.? கோவையில் பரபரப்பு
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக எஸ்.பி. வேலுமணி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், இதன் பின்னனியில் எஸ்.பி. வேலுமணி தான் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களை திமுக கைப்பற்றிய நிலையில், எஸ்.பி.வேலுமணியின் காரணமாக கோங்கு மண்டலத்தில் வெற்றியை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் பரபரக்கும் நிலையில், எஸ்.பி.வேலுமணியின் புகைபடத்தையும் அதன் கீழ் தீவிரவாதி என்ற வாசகத்துடன் கூடிய துண்டு போஸ்ட்டர்களை கோவை புதூர் பகுதிகளில் மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.
தீவிரவாதி என போஸ்டர் ஒட்டியது யார்.?
இதையறிந்து அதிமுக தொண்டர்கள் அந்த போஸ்ட்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியதுடன், 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் மதனகோபால் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது போன்ற சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர். இதனிடையே எஸ்.பி.வேலுமணியை தீவிரவாதி என ஒட்டியது யார்.? எதற்காக ஒட்டினர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையில் ஆய்வு செய்து வருகின்றனர்.