SA20 : 4 பேர் டக் அவுட்.. மும்பை பங்காளியை பதம் பார்த்த ராயல்ஸ்.. புள்ளிப்பட்டியலிலும் டாப்!

மும்பை கேப்டவுன் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

எஸ்ஏ20 லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக நட்சத்திர அணிகளாக கருதப்படும் மும்பை கேப்டவுன் மற்றும் ஜேஎஸ்கே அணிகள் திணறி வருகின்றன. இன்னொரு பக்கம் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்தது. அந்த வகையில் 14வது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து மும்பை கேப்டவுன் அணி களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டவுன் அணி கேப்டன் பொல்லார்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் அந்த முடிவே அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. ராயல்ஸ் அணிக்காக ஜேசன் ராய் – ஜாஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பட்லர் நிதானமாக விளையாட, மறுபக்கம் ஜேசன் ராய் அதிரடியில் வெளுத்து வாங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் பாட்ர்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக ஆடிய அரைசதம் விளாசிய ஜேசன் ராய் 46 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் மில்லர் 24 ரன்கள் எடுத்த போது, காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட்டாகி வெளியேறினார். தொடர்ந்து பட்லர் அரைசதம் அடித்த நிலையில், துஷாரா வீசிய ஓவரில் பட்லர் 54 ரன்களிலும், ஃபேபியன் ஆலன் டக் அவுட்டாகியும் வெளியேறினர். பின்னர் வந்த வேன் பூரன் 8 ரன்களும், பெலுக்வாயோ 2 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை விளாசியது. இதையடுத்து மும்பை கேப்டவுன் அணி தரப்பில் ரிக்கல்டன் மற்றும் வான் டர் டூசன் இணை தொடக்கம் கொடுத்தது. அதில் முதல் ஓவரிலேயே வான் டர் டூசன் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து பிரெவிஸ் அடுத்த பந்திலேயே போல்டாகி வெளியேறினார். இதனால் மும்பை அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதிரடி வீரர் ரிக்கல்டன் 5 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் சிறிது நேரம் தாக்குபிடித்த கான்னர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சாம் கரண் 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் பொல்லார்ட் மற்றும் லிண்டே இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினர். இறுதியாக 18.2 ஓவர்காளில் மும்பை கேப்டவுன் அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த வெற்றியின் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி போனஸ் புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *