SA20 : சாம்பியனான சன்ரைசர்ஸ் அணி.. மாஸ் காட்டிய மார்கோ யான்சன்.. பொறுப்பின்றி ஆடிய டர்பன்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணிக்காக ஹெர்மன் – மலான் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 15 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மலான் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஹெர்மன் – அபெல் கூட்டணி இணைந்தது. இதன்பின் 5 ஓவர்கள் வரை சன்ரைசர்ஸ் அணி நிதானமாக விளையாடியது. ஆனால் பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து அணியின் ஸ்கோரை 55 ரன்களுக்கு கொண்டு சென்றது. அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என்று அபெல் பொளந்து கட்டினார்.
30 பந்துகளில் அபெல் அரைசதம் கடக்க, டர்பன் அணி கேப்டன் மகாராஜ் வீசிய 11வது ஓவரில் ஹெர்மன் 42 ரனக்ளிலும், அபெல் 55 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 11 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. பின்னர் கேப்டன் மார்க்ரம் – ஸ்டப்ஸ் கூட்டணி இணைந்து தேவைக்கேற்ப அதிரடியாக விளையாடியது. ஆனால் 18வது ஓவருக்கு பின் அதிரடியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ஜூனியர் டாலா வீசிய அந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு ஃபோர் உட்பட 20 ரன்கள் சேர்க்கப்பட, அடுத்த 2 ஓவர்களில் 26 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் 56 ரன்களும், மார்க்ரம் 42 ரன்களும் விளாசினர். தொடர்ந்து டர்பன் அணி தரப்பில் டி காக் – பிரீட்ஸ்கி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
முதல் 2 ஓவர்களில் டேனியல் வோரல் மற்றும் மார்க்ரம் இருவரும் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்ய, வெறும் 5 ரன்களை மட்டுமே டர்பன் அணி சேர்த்தது. இதையடுத்து வழக்கம் போல் முக்கிய போட்டிகளில் சொதப்பும் டி காக் 3வது ஓவரில் 3 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஸ்மட்ஸ் ஒரு ரன்னிலும், ராஜபக்சே டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் டர்பன் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.