பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்..!
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியை கடந்து செல்கிறார்கள்.
அவர்களுக்கு ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பாதயாத்திரை பக்தர்களுக்கு கால்களில் ஏற்படும் வெடிப்பு, கொப்பளங்கள் மற்றும் காவடி சுமந்து வருவதால் ஏற்படும் தோள்பட்டை வலி போன்ற உடல் உபாதைகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.
ஈஷாவின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் தினந்தோறும் தோராயமாக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, “தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்ணாக இருந்துள்ளது. பழனி பாதயாத்திரை செல்வோருக்கு பணிவிடை செய்தது எங்களுக்கு கிடைத்த பேறு. இத்தகைய தீவிரமும் பக்தியும்தான் பாரதத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆன்மீகத்தின் நாடியை உயிர்ப்பாக வைத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் அங்கு இருப்பதால் பாதயாத்திரை பக்தர்கள் ஆதியோகியின் தரிசனத்தையும் பெற்று செல்கிறார்கள்.