Sadhguru | சத்குருவுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய என்ன காரணம்..? மருத்துவர்கள் விளக்கம்..!
சத்குரு சமீபத்தில் தீவிரமான உடல் நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தது பலருக்கும் தெரியும். தற்போது அவர் உடல்நிலை முன்னேறி அவரே வெளியிட்ட வீடியோதான் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. சத்குருவை பின் தொடரும் பலருக்கும் இந்த வீடியோ அதிர்ச்சியான செய்திதான். காரணம் சமீபத்தில்தான் மஹா சிவராத்திரியை கோலாகலமாக நடத்தினார். இப்படி திடீரென அறுவை சிகிச்சை செய்ய என்ன காரணம்..?
கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவருக்கு இருந்த நிகழ்ச்சிகளை தள்ளிப்போடாமல் பங்கேற்றிருக்கிறார். இந்த தலைவலியோடு மஹாசிவராத்திரியையும் நடத்தியிருக்கிறார்.
இவ்வளவு தூரம் சமாளித்தும் அவரால் கடுமையான தலைவலியை தாங்கிக்கொள்ள முடியாமல் போக 14 ஆம் தேதி மதியம் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு சிகிச்சை பார்த்த நரம்பியல் நிபுணர் வினித் சூரி அவருக்கு எம். ஆர். ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்திருக்கிறார். பின் அதில் மூளையில் தீவிரமான இரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 3-4 வாரங்களாகவே இரத்தக்கசிவு இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
15ஆம் தேதி எம்.ஆர்.ஐ மூலமாக மூளையில் இரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கூறிய போதும் அவர் அதிக திறன் கொண்ட வலி நிவாரணி மாத்திரைகளை போட்டுக்கொண்டு இந்தியா டுடே கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அதன் பிறகு 17ஆம் தேதி காலை கடுமையான தலைவலி அதிகரிக்கவே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மூளையில் வீக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின் அவசர அவசரமாக 17-அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீரான முறையில் முன்னேறி வருகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளர்.
சத்குருவுக்கு சிகிச்சை பார்த்த மூத்த நரம்பியல் நிபுணர் வினித் சூரி ” நாங்கள் அவரிடமே கிண்டலாக ”நாங்கள் எங்களால் முடிந்த மருத்துவ உதவிகளை செய்தோம் ஆனால் நீங்களே உங்களை சரி செய்துகொள்கிறீர்கள்” என்று கூறினோம். ஏனெனில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவே அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இப்போது ரொம்பவே நலமாக உள்ளார். அவருடைய மூளை, உடல் மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் சீராக செயல்பட்டு முன்னேறி வருகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் “ நாங்கள் அவரை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும், சிகிச்சைகள் தர வேண்டும் என்று கூறிய போதும் அவர் எங்களிடல் “ நன் கடந்த 40 வருடங்களில் ஒரு மீட்டிங்கை கூட தவற விட்டதில்லை” என்று கூறினார். அவருக்கு கடுமையான வலி மற்றும் அறிகுறிகள் இருந்தபோதிலும் அவருடைய திட்டப்படி மார்ச் 14 அன்று தனது கூட்டத்தில் பங்கேற்றார்.
17ஆம் தேதியன்று அவருக்கு நரம்பு செயல்பாடுகள் மோசமானதாக இருந்தது. அதோடு அவருடைய வலது கால் மிகவும் பலவீனமாக இருந்தது. கடுமையான தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகளையும் அவர் சந்தித்தார். பின் CT ஸ்கேன் செய்த பின் அதில் மூளை வீக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. அது அவருடைய உயிருக்கே ஆபத்தானதாக இருந்தது.
உடனே வினித் சூரி தலைமையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடைய மூளையில் இருந்த இரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது.