தமிழ்நாடு டீம் தோல்விக்கு சாய் கிஷோர் தான் காரணம்.. பொங்கி எழுந்த கோச்.. என்ன நடந்தது?

ரஞ்சி கோப்பை அரை இறுதியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், இந்த தோல்விக்கு காரணமே தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் எடுத்த முடிவு தான் என அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.

ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டி மும்பையில் நடைபெற்றது. தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி மும்பையை சேர்ந்தவர் என்பதால் அவர் பிட்ச் மற்றும் அங்கு நிலவிய வானிலையை வைத்து டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என கூறியதாகவும், ஆனால், கேப்டன் சாய் கிஷோர் தன்னிச்சையாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

பந்துவீச்சுக்கு சாதகமான சூழலில் பேட்டிங் தேர்வு செய்ததாலும், வீரர்களை அனைவரும் டாஸ் வென்றால் பந்து வீச வேண்டும் என்ற மனநிலையில் இருந்த போது பேட்டிங் தேர்வு செய்ததால் பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி அடைந்து முதல் ஒரு மணி நேரத்திலேயே பாதி விக்கெட்களை இழந்ததாகவும் பயிற்சியாளர் குல்கர்னி கூறி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த போதும் அதன் பின் ஷர்துல் தாக்குர் அடித்த சதம் காரணமாக 378 ரன்கள் குவித்து தமிழ்நாடு அணியை கதிகலங்க வைத்தது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆகி இன்னிங்க்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வி குறித்து பேசிய சுலக்ஷன் குல்கர்னி, “நான் எப்போதும் நேராக தான் பேசுவேன். நாங்கள் முதல் நாள் 9 மணிக்கே இந்தப் போட்டியில் தோற்று விட்டோம். அந்த பிட்ச்சை பார்த்த உடன் நான் என்ன நடக்கும் என முடிவு செய்து இருந்தேன். ஒரு பயிற்சியாளராக, மும்பையை சேர்ந்தவனாக அந்த சூழ்நிலை எனக்கு நன்றாக தெரியும். எனவே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என நாங்கள் தயாராக இருந்தோம். நாங்கள் முதலில் பந்து வீசி இருக்க வேண்டும். ஆனால், எங்கள் கேப்டன் வேறு ஒரு முடிவை எடுத்து இருந்தார்.” என்றார்.

மேலும், “நாங்கள் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும் என மனதளவில் தயாராகி இருந்தோம். ஆனால், நாங்கள் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததாக தொலைக்காட்சியில் பார்த்த உடன் எங்கள் பேட்ஸ்மேன்கள் மனதில் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் அரை மணி நேரம் அவர்கள் மனதில் அது ஓடி இருக்கும். முதல் ஓவரின் நான்காவது பந்தில் உங்கள் அணியின் சர்வதேச வீரர் (சாய் சுதர்ஷன்) ஆட்டமிழக்கிறார். அப்படி என்றால் அந்த சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். முதல் ஒரு மணி நேரத்தில் நாங்கள் அந்தப் போட்டியில் தோற்று விட்டோம். அதில் இருந்து மீள்வது மிகவும் கடினம்” என்றார் குல்கர்னி.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *