கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை களைகட்டியது @ பொங்கல்
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம்.
அங்கு காய்கறி, பழம், பானை, மலர் மாலை, கரும்பு என பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால், பல பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிவார்கள். இதனால் கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க, கடந்த ஆண்டு முதல் சந்தையின் தென் மேற்கு பகுதியில் கனரக லாரிகள் நிறுத்தும் இடத்தில் சிறப்பு சந்தை அமைக்கப் பட்டு, கரும்பு கட்டு, மஞ்சள், இஞ்சி கொத்து மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்கு தேவையான மற்ற பொருட்களை மலர், காய், கனி சந்தைகளிலேயே வாங்கிக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்நிலையில், மதுரை மேலூரில் இருந்து நேற்று 150 லாரிகளில் கரும்புகள் வந்திறங்கின. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு தரத்துக்கு ஏற்ப ரூ.450 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. விலை நாளை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இருந்து இந்த முறை கரும்பு வரவில்லை. அங்கிருந்து வரத்து இருந்தால் விலை குறையக் கூடும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிகளில் இருந்து குவிந்துள்ள மஞ்சள், இஞ்சி கொத்துகள் ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சி வாங்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறு கடை வியாபாரிகள், சில்லறை விற்பனை சந்தை வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் என ஏராளமானோர் குவிந்தனர்.