சல்லியர்கள் படமல்ல; வரலாற்றுப் பதிவு: சீமான்

‘மேதகு’ படத்தை இயக்கிய கிட்டு, அடுத்து இயக்கியுள்ள படம், ‘சல்லியர்கள்’. சேது கருணாஸ், கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.

சத்யாதேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கருணாஸ், ‘களவாணி’ திருமுருகன், மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு கருணாஸ் மகன் கென், அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், சீமான் பேசும்போது கூறியதாவது: ‘சல்லியர்கள்’ என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

அது ஓர் ஆவணம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்தவர்கள், நம் தமிழர்கள் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது.

இலக்கியம் பொய் பேசும், புராணம் பொய் பேசும், வரலாறு எப்போதும் பொய் பேசாது, பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதைத் தான் இந்தப் படம் பேசுகிறது. இதை ஒரு படம் என்று சொல்லாமல் வரலாற்றுப் பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும்.

நம் அடுத்த தலைமுறைக்கு இதை கடத்த வேண்டும். வரலாறுதான், எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதைச் செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *