ஜார்கண்ட் புதிய முதல்வராக இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன்? யார் இவர்?
சட்டவிரோத பணப்பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து கடந்த முதன்முறையாக அவரிடம் வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் 28,29 ஆகிய தேதிகளில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கடந்த 27-ம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற ஹேமந்த் சோரன் அங்கிருந்து ஜார்கண்டிற்கு ரகசியமாக திரும்பினார். அவர் தனி விமானத்தில் வராமல் தனி காரில் ராஞ்சிக்கு திரும்பியதால் அவர் தலைமைறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் 2 நாட்கள் கழித்து அவர் தனது அமைச்சர்கள் மற்றும் ஆதரவு எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹேமந்த் சோரன் கைது
இதை தொடர்ந்து நேற்று முன் தினம் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தனர். இந்த சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை கைது செய்தனர். முன்னதாக ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிததை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனின் அளித்தார்.
புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு
இதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். முதலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஜார்கண்ட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மனைவியை முதலமைச்சராக்காமல், தனது நெருங்கிய நண்பரான சம்பாய் சோரனை முதல்வராக்குவதாகுவதாக கூற்ப்படுகிறது.
இதனிடையே நேற்று ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்த சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு நேற்று நள்ளிரவில் அழைப்பு விடுத்துள்ளார். எனினும், 10 நாட்களில் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து இன்று சம்பாய் சோரன் ஜார்கண்டின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த சம்பாய் சோரன்?
ஹேமந்த் சோரன் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சம்பாய் சோரன். இவர் செரைகேலா – கர்சைவான் மாவட்டத்தில் ஜிலிங்கோரா என்ற கிராமத்தில் 1956-ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். 1991-ம் ஆண்டு முதல் செரைகேலா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரனின் தீவிர விசுவாசி ஆவார். 1995 முதல் 2019 வரை நடந்த தேர்தல்களில் 2000-ம் ஆண்டில் நடந்த தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவர் சம்பாய் சோரன்.