2012இல் தோனிக்கு வந்த அதே நிலைமை.. தவிக்கும் ரோஹித் சர்மா.. 12 ஆண்டுகள் கழித்து.. என்ன நடந்தது?

2012 ஆம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்த போது இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. தோனியின் கேப்டன்சியில் அது மிகப் பெரிய தோல்வியாக இன்றும் பார்க்கப்படுகிறது.
2012இல் நடந்த அந்த டெஸ்ட் தொடருக்கு பின் தோனியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது. அதன் உச்சமாக 2014இல் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இப்போது மீண்டும் அப்படி ஒரு இக்கட்டான நிலை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது,
2012இல் எப்படி இங்கிலாந்து அணி, இந்திய அணியை இந்திய மண்ணிலேயே வைத்து வீழ்த்தியதோ, கிட்டத்தட்ட அதே போல பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் செய்யக் காத்திருக்கிறது. தற்போது நடந்து வரும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1 – 1 என சமநிலையில் உள்ளன.
ஆனால், மனதளவில் எந்த அணி அதிக தன்னம்பிக்கை கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி தான் அதிக தன்னம்பிக்கை கொண்டு இருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி, கே எல் ராகுல் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அணியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹானேவை அணியை விட்டு தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. பந்துவீச்சில் முகமது ஷமி இல்லை. ஜடேஜா காயத்தால் ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், அனுபவம் குறைந்த வீரர்களை கொண்டு சமாளித்து வருகிறது இந்திய அணி.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ரோஹித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாவார். 2012க்கு பின் 12 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த மோசமான சாதனையை செய்த கேப்டன் என்ற பெயர் ரோஹித் சர்மாவுக்கு ஏற்படும். அவரது கேப்டன்சி மீதும் கடும் விமர்சனம் எழும்.