சாம்சங் அனல் பறக்கும் பரபர ஆஃபர்.. ஷாக்கான ஆப்பிள், Oneplus..!
உலகில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்கும் முன்னணி பிராண்ட் என்ற பட்டத்தைப் பல வருடங்களாக வைத்திருந்த சாம்சங்-ஐ ஓரம்கட்டிவிட்டு, ஆப்பிள் அப்பட்டத்தைப் பெற்றது.
இந்த நிலையில் அடுத்த வருடமே இந்தப் பட்டத்தைத் திரும்பவும் பெற வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை வைத்திருக்கும் சாம்சங், வாடிக்கையாளர்களைக் கவர்வதைத் தாண்டி கைக்கு எட்டும் தூரத்தில் சாம்சங் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சாம்சங் இந்தியாவில் அதன் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அல்ட்ரா-ஸ்விஃப்ட் 10 நிமிட டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த குருகிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விரைவு-வணிகத் தளமான பிளிங்கிட் உடன் இணைந்துள்ளது.ஜனவரி 17 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மூன்று நாட்களுக்குள் 2,50,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இதற்கு அதிகப்படியான தேவை இருக்கும் காரணத்தால் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்வதை இந்தப் புதிய டெலிவரி கூட்டணியை அமைத்துள்ளது.சாம்சங் மற்றும் பிளிங்கிட் ஆகியவை பயனர்களுக்கு மின்னல் வேக டெலிவரி அனுபவத்தை வழங்க உறுதி கொண்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் ஆர்டர் செய்த தருணத்திலிருந்து Galaxy S24, S24 Plus மற்றும் S24 Ultra ஆகிய போன்களை 10 நிமிடங்களுக்குள் டெலிவரி இலக்கை அடைவதை உறுதி செய்கிறது.விரைவு-வணிகத் தளம் எனக் கூறப்படும் குவிக் காமர்ஸ் தளங்களில் சமீபகாலமாக உணவு, மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களைத் தாண்டி எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் அதிகளவில் விற்கப்படுகிறது. இதன் நீட்சியாகத் தற்போது சாம்சங் Galaxy S24, S24 Plus மற்றும் S24 Ultra மாடல் போன்களைப் பிளிங்கிட் வாயிலாக ஹோம் டெலிவரி செய்யப்பட உள்ளது.இந்தக் குவிக் டெலிவரி சேவை டெல்லி-என்சிஆர், பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அளிக்கப்படுகிறது. இதைவிட முக்கியமாக ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு இருந்தால் இன்ஸ்டென்ட் தள்ளுபடியாக 5000 ரூபாய் வரையிலான ஆஃபர் அளிக்கப்படுகிறது.