கருவறை மண், தீர்த்தம், வெள்ளி நாணயம், லட்டு, தட்டு….. அயோத்தி விருந்தினர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் பாக்ஸ் தயார்…..!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து 11,000க்கும் மேற்பட்ட விவிஐபி விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்.
இவர்களில் ஆன்மிகவாதிகள், மகான்கள், பக்தர்கள் கலைத்துறையினர், அரசியல்வாதிகள் என பலதரப்பட்டவரும் கலந்து கொள்கின்றனர். இவர்களை வரவேற்க அயோத்தியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனவரி 12ஆம் தேதியிலிருந்தே வரத் தொடங்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை தங்க வைப்பதற்காக ராம் நகரியில் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொள்ளும் விவிஐபி விருந்தினர்களுக்கு இரண்டு கிஃப்டு பாக்ஸ் ரிட்டர்ன் கிப்டாக வழங்கப்படும். இதில் ஒரு பெட்டியில் நெய்யில் செய்யப்பட்ட பெசன் லட்டு பிரசாத டப்பாவில் இருக்கும்.
மேலும் கோவிலின் கருவறையிலிருந்து எடுக்கப்பட்ட மண், சரயு நதியின் தீர்த்தம், பித்தளை தட்டு, ராமர் கோயில் பதித்த ஒரு வெள்ளி நாணயம் ஆகியவை ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். ராமருடன் தொடர்புடைய இந்தப் பொருட்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து இந்த நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது. அங்கு தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு சனாதன் சேவா டிரஸ்ட் மூலம் அனைத்து சேவைகளும் செய்து தரப்படும். இது குறித்து சனாதன் சேவா அறக்கட்டளையின் நிறுவனர் ஷிவ் ஓம் மிஸ்ரா கூறுகையில், “சனாதன தர்மத்தில் விருந்தினர்கள் கடவுளுக்குச் சமமாகக் மதிக்கப்படுகிறார்கள். அயோத்தியை அடையும் அனைத்து விருந்தினர்களுக்கும் ராமர் தொடர்பான நினைவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளன” எனக் கூறியுள்ளார்.