Sandakozhi: “சண்டக்கோழி படத்துக்கு விஷால் பெரிய தொகை கேட்டான்!” – விஷால் அப்பா ஜி.கே ரெட்டி

விஷாலை அதிரடி ஆக்ஷன் பாதை அமைத்துக் கொடுத்த பெருமை ‘சண்டக்கோழி’ படத்திற்குத்தான் உண்டு. இப்போதும் விஷாலுக்கு அடைமொழியாக பலரால் சொல்லப்படுவது ‘சண்டக்கோழி’ தான். விஷாலின் 20 வருட கரியரில் மிக முக்கியமான படம் மட்டுமல்ல, இயக்குநர் லிங்குசாமிக்கும் பாராட்டுகளைக் குவித்த படம். அப்படிப்பட்ட மிரட்டல் அதிரடி படமான, ‘சண்டக்கோழி’ வெளியாகி 18 வருடங்கள் ஆவதையொட்டி, அப்படத்தின் தயாரிப்பாளரும் விஷாலின் அப்பாவுமான ஜி.கே ரெட்டியிடம் பேசினேன்…
“எனக்கு சினிமாவில் சாதிக்கணும்ங்குற பிடிவாதமும் திமிரும் உண்டு. பிசினஸ் பண்ணிக்கிட்டே படம் தயாரிக்கவும் ஆரம்பிச்சேன். எல்லா மொழியிலும் சினிமாத்துறையினரின் நட்புவட்டம் அதிகமாச்சு. என் மூத்த மகன் விக்கி பன்னிரண்டாம் வகுப்பும் விஷால் பத்தாம் வகுப்பும் படிச்சிட்டிருந்தாங்க. ரெண்டு பேருக்குமே அப்போ சினிமா ஆர்வமே கிடையாது. ஆனாலும், ரெண்டு பசங்கள்ல யாராவது ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அவங்க அம்மாவுக்கு விக்கியைத்தான் ஹீரோவாக்கணும்னு ஆசை இருந்துச்சு. அதனால, விக்கியை ஹீரோவா நடிக்குற படத்துல நீங்கதான் அப்பாவா நடிக்கணும்னு முதலில் சிவாஜி கணேசன் சார்கிட்ட கால் ஷீட் கேட்டேன். அவரும் உடனே கொடுத்துட்டார். அந்தப் படம்தான் ‘பூப்பறிக்க வருகிறோம்.’
அதற்கடுத்து எடுத்த இரண்டாவது படமும் பெரிசா ஓடல. அதனால, என் மனைவி உங்க பணத்தை வீணாக்காதீங்க. விஷாலை வெச்சு முயற்சி பண்ணுங்கன்னு சொன்னாங்க. ஆனா, விஷாலுக்கு பிசினஸ் பண்ணுறதுலதான் ஆர்வம் இருந்தது.
பிசினஸ் விஷயமா எங்க போனாலும் ‘எங்க போறீங்க டாடி, நானும் கூட வர்றேன்’ அப்படின்னு ஆர்வமா என்கூட வர முயற்சி பண்ணுவான். என்கூட அவன் வரும்போதும், கறுப்பா களையா இருக்கானேன்னு நிறைய பேரு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அப்படிச் சொன்னது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவனை எப்படியாவது ஹீரோவாக்கிடணும்னு ‘ஒரே ஒரு படத்துல நடிச்சுடுப்பா, ப்ளீஸ்’ன்னு சொன்னேன். அப்பவும் ‘நோ டாடி’ன்னு மறுத்துட்டான். எங்க நிறுவனம், ஆறு வருஷமா இந்தியாவுல நம்பர்-ஒன் இடத்துல இருந்தது. அப்பா மாதிரியே பிசினஸ்ல பேரு எடுக்கணும்ங்குறதுதான் அவனோட ஆசையே. ஆனா, அவனை நடிக்க வைக்கிறதுக்கு நான் கெஞ்சிக்கிட்டே இருப்பேன். ‘நடி நடின்னு சொல்லி டார்ச்சர் பண்ணுற ஒரே அப்பா இந்த உலகத்துல நீயாதான் இருப்ப’ன்னு விஷால் கோபப்படுவான். ஒரு கட்டத்துல அவனுக்கே கொஞ்சம் ஆர்வம் வந்துடுச்சு. அப்போக்கூட, நடிப்புமேல இல்லை, இயக்கத்துமேலதான். அர்ஜுன் எனக்கு நல்ல நண்பர். அவர்கிட்டதான் உதவி இயக்குநரா ஒர்க் பண்ணினான். அதுக்கப்புறம், இரண்டு வருடங்கள் கழிச்சுதான் படம் நடிக்க ஒப்புக்கிட்டான். அந்த படம்தான் ‘செல்லமே’. உண்மையிலேயே `என் செல்லமே!’ன்னு என்னை சொல்ல வெச்ச படம். ஏன்னா, விஷால் நடிகன் ஆனது முழுக்க முழுக்க என் இன்ட்ரஸ்டால நடந்தது.
நான் ஏற்கெனவே, படங்கள் தயாரிச்சிருக்கேன். அதுல நடந்த தப்பெல்லாம் விஷாலுக்கு நல்லாவே தெரியுமில்லையா? அதனால, எல்லாத்தையும் உணர்ந்து செயல்பட்டதால படம் சக்சஸ் ஆச்சு. அதுக்கப்புறம், ‘சண்டக்கோழி’ சூப்பர் டூப்பர் ஹிட்டு. மக்கள் அவனை அதுக்கப்புறம் ஆக்ஷன் ஹீரோவாகத்தான் பார்க்க ஆரம்பிச்சாங்க. அதனால, தொடர்ச்சியாக ஆக்ஷன் பாதையிலேயே போக ஆரம்பிச்சான்.
விஷால் பேரும் நல்லா ஃபேமஸ் ஆக ஆரம்பிச்சுடுச்சு. ‘சண்டக்கோழி’ படத்துக்குப் பெரிய தொகை கேட்டான். அவ்வளவு கொடுக்கவேணாம்னு சொன்னாங்க. ஆனா, நான் அவனை நம்பிக் கொடுத்தேன். ஏன்னா, அளவுக்கு மீறிக் கேட்கமாட்டான். அதையும் மீறி அவன் கேட்கிறான்னா அதுக்குக் காரணம் இருக்கும்னு நம்பிக் கொடுத்தேன். அந்த நம்பிக்கையைப் காப்பாத்திட்டான். படம் பெரிய சக்சஸ். எத்தனையோ நடிகைகள் விஷால்கூட ஹீரோயினா நடிச்சிருக்காங்க. பெஸ்ட் பேர்ன்னா கீர்த்தி சுரேஷ்னுதான் ஒரு தயாரிப்பாளரா நான் சொல்லுவேன்.
‘சண்டைக்கோழி’யில வர்ற அப்பா மகன் மாதிரிதான் ரியல் லைஃப்ல நானும் அவனும். நான் என்ன பண்ணுறேனோ அதைத்தான் இயக்குநரும் படமா எடுத்திருந்தாரு. கதையைப் படிக்கும்போதே என்னைப் பார்த்த மாதிரியே இருந்தது. அதனால, அவனோட படங்கள்ல எனக்கு ரொம்பப் புடிச்ச படம் ‘சண்டக்கோழி’தான். அதைத் தெலுங்கிலேயும் டப்பிங் பண்ணினோம். ஆந்திர மக்கள் வெள்ளையா இருக்கிற ஹீரோ படங்களைத்தான் பார்ப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா,ஆந்திராவிலேயும் ‘சண்டக்கோழி’ பெரிய ஹிட்டு. பதிமூணு தியேட்டர்களில் 100 நாள் செம வசூலைக் குவிச்சது. அதனால, ‘சண்டக்கோழி’ எனக்கு எப்பவும் ஸ்பெஷல்தான்” என்கிறார் நெகிழ்வுடன்.