சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் முன்னதாக வெளியான தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்கள் நல்ல விமரிசனங்களைப் பெற்றது.
சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் 80-ஸ் பில்டப் என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இந்நிலையில் சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.