சப்னா கில் தாக்குதலால் உயிர் பயமே வந்தது.. பீதியில் ஓடி வந்தேன்.. இளம் வீரர் பிரித்வி ஷா ஓபன் டாக்!
பிரபல யூட்யூபர் சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கிய போது உயிரை கையில் பிடித்து ஓடி வந்ததாக இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டாலும், இதுவரை முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் ஐபிஎல் தொடருக்குள் தயாராக இருக்க வேண்டுமென தீவிர பயிற்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டில் இந்திய வீரர் பிரித்வி ஷா, யூட்யூபர் சப்னா கில் என்பவருடன் மோதலில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கினார். இதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது சப்னா கில் கூறிய அனைத்து பொய் என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து பிரித்வி ஷா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், மும்பையில் உள்ள சஹாரா ஸ்டார் ஹோட்டலில் உள்ள பெரல் கிளப்பிற்கு அன்றைய தினம் நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
அப்போது 4 முதல் 5 பேர் என்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பினார்கள். செல்ஃபி எடுத்த பின் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் செல்ஃபி எடுத்த அதே குரூப் மீண்டும் வந்து, அந்த செல்ஃபி-க்கள் சரியில்லை. மீண்டும் எடுக்கலாமா என்று கோரினார்கள். அதன்பின் நானும் அவர்களுடன் செல்ஃபி எடுத்தேன். பின் மீண்டும் 3வது முறையாக என்னிடம் வந்து எனது தோளில் கைபோட்டு, என்னிடம் எந்த அனுமதியும் கேட்காமல் வீடியோ எடுக்க தொடங்கினார்கள்.
அப்போது என்னுடைய மேனேஹர் சப்னா கில் மற்றும் அவர்களின் நண்பர்களிடம் அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார். அதன்பின் கிளப்பில் இருந்து நானும் எனது நண்பர்களும் வெளியில் சென்ற போது, சப்னா கில் பேஸ் பால் பேட்டுடன் நின்று கொண்டிருந்தார். எனது கார் பேஸ் பால் பேட்டால் அடித்து உடைக்கப்பட்டது. ஏற்கனவே கண்ணாடிகள் உடைக்கப்பட்ட பின், உடனடியாக நான் காரில் இருந்து கீழே இறங்கி சப்னா கில்லின் கைகளில் இருந்து பேஸ் பால் பேட்டை பிடுங்கி கொண்டேன்.
அப்படி செய்யவில்லை என்றால், மொத்த காரையும் உடைத்து தள்ளியிருப்பார். அதன்பின் சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்பதால், எனது பிஎம்டபிள்யூ காரினை அங்கேயே விட்டுவிட்டு, நண்பரின் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன். எனது நண்பர்கள் காரினை கொண்டு வருகிறோம் என்று கூறினார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக பயம் ஏற்பட்டது. சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்தேன். அதன்பின் எங்கள் மீது எந்த தவறும் இல்லையென்பதால், உடனடியாக புகாரளித்தோம் என்று தெரிவித்துள்ளார்.