அயோத்தியின் அணிகலன் சரயு; ஸ்ரீராம அவதாரத்தின் ஆதியும் அந்தமுமான சரயுவின் ஆச்சர்யமான தகவல்கள்

புண்ணிய பூமியாம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. பக்தர்களின் நீண்ட நாள் கனவான ஸ்ரீராம ஜன்ம பூமித் திருக்கோயில் திறப்பு விழாவை எல்லோருமே ஆவலோடு எதிர்நோக்கி வருகிறோம்.பலரும் அயோத்திக்குப் புறப்படவும் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் அயோத்திக்கு அழகும் பெருமையும் சேர்க்கும் சரயு நதியின் பெருமைகளை சற்றே சிந்திப்போம்.

அயோத்தி சரயு

அசுரர்களின் இம்சைகளைத் தாங்க முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுகோள் வைத்தனர். துஷ்ட நிக்ரகம் செய்ய ராமாவதாரம் எடுக்க விரும்பிய ஸ்ரீமகாவிஷ்ணு வைகுந்தத்தின் ஒரு பகுதியையே அயோத்தியாக்கினார். அந்த அயோத்தியை மனு, சரயு நதியின் அருகே ஸ்தாபித்தார் என வரலாறு கூறுகிறது. திருமாலோடு மண்ணுலகில் சேர்ந்திருக்க விரும்பிய அவரின் தர்மபத்தினியான நீளாதேவியே சரயுவாகத் தோன்றி அயோத்திக்கு அருகே பிரவாகம் எடுத்தாள் என்கின்றன புராணங்கள். சரத்தைப் போல விரைந்து ஓடுபவள் என்பதால் சரயு என்றானாள்.

இன்றும் சுத்தமான குளிர்ந்த நதியாக ஓடும் சரயு அன்னையின் 14 படித்துறைகள் அயோத்தியில் முக்கியமானவை. அதில் குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மண் காட் போன்றவை சில. ஸ்ரீராம நவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் உறுதி என்பது நம்பிக்கை. கங்கைக்கு ஆரத்தி எடுப்பதைப் போல சரயுவுக்கும் ஆரத்தி பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.

ராமாயணத்தின் தொடக்கம் சரயு நதிக்கரையில் இருந்தே தொடங்குகிறது. நடக்க முடியாத, பார்வை இழந்த பெற்றோர்களைத் தூக்கிச் சுமந்த சிரவணன், சரயுவில் குடுவை ஒன்றில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ மிருகம் நீர் குடிக்கிறது என்று எண்ணிய தசரத மன்னர், சப்தம் வந்த திசை பார்த்து அம்பெறிய அது சிரவணனைக் கொன்றது. மகனை இழந்த பெற்றோர், தசரதனும் அவ்வாறே மகனைப் பிரிந்து புத்திர சோகத்தில் வாடவேண்டும் என்று சாபம் பெற்றார். ராம அவதாரத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வே அமைந்தது எனலாம். தசரதனின் அம்பு சிரவணனைக் கொன்ற பகுதி சர்வாரா என்றும், சிரவணன் பெற்றோரோடு வாழ்ந்த பகுதி சமதா என்றும் அயோத்தியிலேயே உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *