Sarfaraz Khan: `இழக்கறதுக்கு ஒண்ணும் இல்ல; ட்ராக் பேன்ட் விற்கவே போயிடலாம்!’ – சர்ஃபராஸ் சாதித்த கதை
தடதடவென வேகமெடுக்கும் ஒரு மோட்டார் சைக்கிளில் நௌஷத் கானும் அவரின் மகனான சர்ஃபராஸ் கானும் மாலை நேரமாகக் கிளம்பி விடுவார்கள்.
மோட்டார் சைக்கிளில் நௌஷத் கானுக்கு முன்பாக ஒரு பெரிய மூட்டை இருக்கும். நௌஷத்துக்கும் சர்ஃபராஸூக்கும் இடையில் ஒரு மூட்டை இருக்கும்.
சர்ஃபராஸின் தோளில் ஒரு மூட்டை இருக்கும். அது எல்லாமே டிராக் பேன்ட்டுகள். மும்பை நகர வீதிகளில் டிராக் பேன்ட்டுகள் விற்பதுதான் அவர்களின் வேலை. நௌஷத்தின் அலுவலக வேலைகளுக்கும் சர்ஃபராஸின் கிரிக்கெட் பயிற்சிக்கும் இடையில் மிஞ்சியிருக்கும் நேரத்தில் அவர்களின் வழக்கம் இதுதான்.
“நாங்கள் குடிசைகளிலிருந்துதான் வந்தோம். அங்கே கழிப்பறையைப் பயன்படுத்தவே பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். பின்னால் நிற்பவர்கள் என் மகனின் தலையில் தட்டி ஓரம் தள்ளி முன்னால் சென்றதையெல்லாம் பார்த்திருக்கிறேன். நாங்கள் அப்படியான இடத்திலிருந்துதான் வந்திருக்கிறோம்!” – சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் நௌஷத் கான் இப்படி கூறியிருப்பார்.
கடினமான சூழல்களை எதிர்கொண்டு ரத்தத்தோடு சேர்த்து வியர்வையையும் உதிர்க்கிற இதயங்களுக்கு மனஉறுதி எப்போதும் அதிகமாகவே இருக்கும். நௌஷத்தும் சர்ஃபராஸூம் மும்பையில் போராடியதற்கான அறுவடையாகத்தான் ராஜ்கோட் டெஸ்ட் அமைந்திருக்கிறது.
அனில் கும்ப்ளே கையில் சர்ஃபராஸ் தொப்பியை வாங்குகிறார். இந்தக் காட்சியை கண்டு நௌஷத் கண்ணீர் சிந்துகிறார். ராஜ்கோட்டின் பச்சை பசேல் புற்களை நனைத்த அந்தக் கண்ணீருக்குள் இருக்கும் வலியும் கனவும் தங்களின் எல்லைகளை மீறி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு சராசரி இந்திய குடும்பத்தின் லட்சியம்.
“கிரிக்கெட் ஜெண்டில்மேன்களின் ஆட்டம் மட்டுமல்ல. அது எல்லாருக்குமான ஆட்டம்!” மைதானத்திற்கு வருகை தந்திருந்த நௌஷத் கானின் டீசர்ட்டில் பொறிக்கப்பட்டிருந்ந்த வாசகம் அது. தனது மகனின் மீது கரியர் முழுவதும் வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்கான பதிலடி இது.