சதீஷின் வித்தைக்காரன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் வித்தைக்காரன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.
சதீஷ் இதற்கு முன் நாய் சேகர் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அப்படி ஒரு படம் வெளியானதா என்று கேட்கும் அளவிலேயே அப்படத்தின் வெற்றி இருந்தது. இந்நிலையில், வித்தைக்காரன் படத்தில் அவரை மீண்டும் நாயகனாக்கினார்கள். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள். சதீஷ் இரட்டை வேடத்தில் நடிப்பது இதுவே முதல்முறை.
வித்தைக்காரனை லோகேஷ் கனராஜிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கி இயக்கியுள்ளார். இதன் பர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். படத்தின் போஸ்டர்களில் மெஜிஷியன் லுக்கில், கையில் சீட்டுக்கட்டுடன் சதீஷ் காணப்படுகிறார். இதனால், அவரது ஒரு வேடம் மெஜிஷியனாக இருக்கலாம் என்கிறார்கள்.
வெங்கி வித்தைக்காரனை டார்க் க்யூமர் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த ஜானரில் தயாராகும் படங்களில் அழுத்தமான கதை இருக்காது. வித்தைக்காரனின் மையக்கருவாக சமூகத்துக்கு தேவைப்படும் ஒரு கருத்தை வைத்துள்ளதாக படக்குழு கூறுகிறது. சென்னைப் பின்னணியில் நடக்கும் கதையிது.
சதீஷுடன் சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், பாவெல் நவகீதன், மதுசூதன், சுப்பிரமணியம் சிவா, ஜப்பான் குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 16 வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படம் பிப்ரவரி 23 வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியை தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.