சனீஸ்வரரை சாந்தப்படுத்தி சனி உதயத்தை நன்மையாக மாற்றும் சனிக்கிழமைப் பரிகாரங்கள்!
ஜோதிடசாஸ்திரங்களின்படி, சனி பகவானின் ஒவ்வொரு நகர்வும், இயக்கமும் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். தர்ம தேவனாக கருதப்படும் சனீஸ்வரர், அவரவர் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களைக் கொடுப்பார் என்பதால், அவர் நீதி வழங்குபவராக கருதப்படுகிறார். அதனால் தான், சனியின் உதயம், அஸ்தமனம், கிரக மாற்றம், நட்சத்திர மாற்றம் என சனீஸ்வரர் சம்பந்தப்பட்ட அனைத்துமே மிகவும் முக்கியம் வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன.
தற்போது கும்ப ராசியில் அஸ்தமனமாகியிருக்கும் சனீஸ்வரர் இன்னும் ஒரு வாரத்தில் மார்ச் 18 ஆம் தேதியன்று கும்ப ராசியில் உதயமாகிறார். சனியின் உதயம் அனைத்து ராசியினருக்கும் நன்மைகளையும், தீமைகளையும் கலந்தே கொடுப்பார் என்றாலும், அனைவரும் சனியின் பரிகாரங்களை தெரிந்துக் கொண்டு செய்தால் தாக்கத்தைக் குறைக்கலாம்.
சனி பரிகாரங்கள்
சனிக்கிழமையில் மிளகு பயன்பாடு
சனிக்கிழமை நாட்களில் உணவில் சிவப்பு மிளகாய்க்கு பதிலாக கருப்பு மிளகு பயன்படுத்துவதும், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெள்ளை நிற உப்புக்கு பதிலாக கருப்பு உப்பு சேர்ப்பதும் நல்லது என்பது நம்பிக்கை. இது, சனியால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
தானங்கள்
ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யும்போது, உணவு, உடை மற்றும் செருப்புகளை தானம் செய்தால், சனீஸ்வரருக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதேபோல கருப்பு எள் மற்றும் கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் சனியின் தீவீரமான தாக்கத்தைக் குறைக்கும்.
சனிக்கிழமை விரதம்
சனிக்கிழமையன்று விரதம் இருந்து, சனீஸ்வரரை வழிபடுவதும், கருப்பு நிறத்தில் இருக்கும் விலங்குகளுக்கு உணவளிப்பதும் நல்லது. கருப்பு நாய், காகம், கருப்பு நிற மாடு என விலங்குகளின் பசியாற்றினால் சனீஸ்வரரின் மனம் நெகிழும்.
அதேபோல கருப்பு உளுத்தம் பருப்பை தானமாக வழங்குவதும் நல்லது. கருப்பு நிற பொருட்களை சனிக்கிழமைகளில் தானமாக வழங்கினால் சனீஸ்வரரின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமை நாட்களில் அரச மரத்தை வணங்குவது நல்லது. அரச மரத்தை சுற்றி வந்து, அதற்கு தண்ணீரில் பால் மற்றும் சர்க்கரை கலந்து அதன் வேரில் அர்பணித்தால் பொருளாதார நிலை மேம்படும் என்பது ஐதீகம். அரச மரத்திற்கு நீர் வார்ப்பதால், நிதி நிலைமை மேம்படும், கர்மங்கள் குறையும், வாழ்க்கை வளம் பெறும்.
சூரியனின் மைந்தன், ரவிபுத்திரன் என்றும் அழைக்கப்படும் சனீஸ்வரரை சாந்திப்படுத்த, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஜடாதரன், ஆயுள் காரகன், மந்தன், மகேசன், தர்மாதிகாரி, என பல பெயர்கள் கொண்ட சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் செய்யப்படும் பரிகாரங்கள் மூலம், சனி உதயத்தினால் ஏற்படும் கெடுபலங்கள் குறைந்து, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.