சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனியில் கழுத்தை பிடிக்கும் கடன்.. 2024ல் தப்பிக்கும் பரிகாரம்

சென்னை: ஏழரை சனி காலத்தில் கடன் வாங்கக் கூடாது என்று சொல்வார்கள். அதிகமாக கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்து கடன் பட்டவர்கள்தான் அதிகம். 2023ஆம் ஆண்டில் அடி மேல் அடி விழுந்தவர்கள் எல்லாம் எப்படி தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டில் இருந்து கடன் பிரச்சினையில் சிக்காமல் தப்பிக்க சில பரிகாரங்களை பார்க்கலாம்.
ஏழரை சனி என்ன செய்யும்: சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார். சிலருக்கு சனியின் பாதிப்பு பற்றி தெரியாது. நமக்கு ஏழரை நடக்குதோ என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள்.
மீனம்: 2023 ஆம் ஆண்டு முதல் மீனம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். 12ஆம் வீட்டில் உள்ள விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் மீன ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி. சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு செய்யாமல் சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால் சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது. இந்த கால கட்டத்தில் எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்கக் கூடாது.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாகும். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஏழு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. குடும்பத்தில் வரும் பிரச்சினைகளை சமாளிப்பது சிரமம்தான் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இருக்கிற வேலையை விட்டு விடாதீர்கள். இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக கடன் வாங்காதீர்கள். அகலக்கால் வைப்பது ஆபத்தாகி விடும்.
மகரம்: சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகரம் ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். காரணம் ஜென்ம சனி விலகியுள்ளது. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை.