இந்தியர்களை டார்கெட் செய்யும் சவுதி அரேபியா.. சிறப்பு விசா வழங்குகிறதாம்..!!
இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு ஆன்மீகம் மற்றும் ஓய்வுக்காகப் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கவனித்துள்ள ரியாத் அரசு, 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 75 லட்சம் இந்திய பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாபெரும் இலக்கு குறித்து இந்திய சுற்றுலா துறைக்கான மாபெரும் நிகழ்ச்சியான SATTE 2024 கூட்டத்தில் ஆசிய பசிபிக் பிரிவின் சவுதி சுற்றுலா ஆணையத்தின் தலைவர் அல்ஹாசன் அல்தாபாக் தெரிவித்தார்.
இந்த 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 75 லட்சம் இந்திய பயணிகளை ஈர்க்கும் இலக்குடன் இந்தியர்களுக்கு 96 மணிநேர இலவச விசா வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது 4 நாள் விசா முறை.
இந்தியாவை ஒரு முக்கியச் சந்தையாக வலியுறுத்தும் சுவுதி அரேபியா, கடந்த ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவிற்கு வந்த இந்திய பயணிகள் எண்ணிக்கை மட்டும் சுமார் 50 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
SATTE கூட்டத்தில் 3வது ஆண்டாகப் பங்குபெறும் சவுதி அரேபியா, தென் ஆசியாவிலேயே மிகவும் வித்தியாசமான கூட்டம் இது என அல்ஹாசன் அல்தாபாக் தெரிவித்தார். சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் சார்ந்தே இருக்கும் காரணத்தால் இந்த நிலையை மாற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
OPEC+ நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் உற்பத்தியில் பெரும் ஆதிக்கம் செய்வது சவுதி அரேபியா நாடு தான், இதேபோல் அந்நாட்டின் வருவாயில் கிட்டதட்ட 85 முதல் 90 சதவீதம் கச்சா எண்ணெய் எரிவாயு ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கிரீன் எனர்ஜி, எலக்ட்ரிக் வாகனம் என மாறுபட்ட எரிசக்தியை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், கச்சா எண்ணெய் மட்டுமே சார்ந்து இருந்தால் சவுதி பொருளாதாரம் வீழ வெகு காலமில்லை.
இந்த நிலையில் தான் மாற்று வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை நோக்கி சவுதி அரேபியா அரசு பயணிக்கிறது. இதில் முக்கியமான ஒரு துறையாகச் சுற்றுலா துறையும் உள்ளது.