பெட்ரோல் காசை மிச்சம் பிடிக்கலாம்!! மாருதி சுஸுகி உருவாக்கும் எத்தனால் கார் – அறிமுகம் எப்போது?
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் ஃபிளெக்ஸ் ஃப்யுல் காரை டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ 2024 (Bharat Mobility Expo 2024) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. மாருதி சுஸுகியின் இந்த புதிய ஃபிளெக்ஸ் ஃப்யுல் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ என்கிற பெயரில் புதிய கண்காட்சி தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கார்பன் மாசு உமிழ்வை குறைத்து, பசுமையான போக்குவரத்தை வழங்கக்கூடிய வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு நிறுத்தி உள்ளன.
இந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் வேகன்ஆர் ஃபிளெக்ஸ் ஃப்யுல் காரையும், இ.வி.எக்ஸ் எலக்ட்ரிக் காரையும் பொது பார்வைக்கு காட்சிப்படுத்தி உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஃபிளெக்ஸ் ஃப்யுல் கார்களை ஏற்கனவே கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது, பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவிலும் மாருதி சுஸுகியின் ஃபிளெக்ஸ் ஃப்யுல் கார் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இவிஎக்ஸ் எலக்ட்ரிக் காரும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது, பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் மாருதி சுஸுகியின் இந்த எலக்ட்ரிக் கார் கான்செப்ட் பார்வையாளர்கள் பலரை கவர்ந்தது.
இவிஎக்ஸ் ஆனது எலக்ட்ரிக் கார் கான்செப்ட் மட்டுமே ஆகும். அதாவது, இந்த கான்செப்ட்டை அடிப்படையாக கொண்ட புதிய மாருதி சுஸுகி எலக்ட்ரிக் கார் தோற்றத்தில் சற்று மாறுப்பட்டதாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் கார் இவிஎக்ஸ் என்ற பெயரில் வெளிவரலாம் அல்லது வேறு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த எலக்ட்ரிக் காரின் அறிமுகம் இந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா உடன் கூட்டணி சேர்ந்து மாருதி சுஸுகி இந்த எலக்ட்ரிக் காரை உருவாக்குவதால், டொயோட்டாவின் 27பிஎல் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த கார் வடிவமைக்கப்படுகிறது. மாருதி சுஸுகியின் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் நீளம் ஏறக்குறைய 4.3 மீட்டர்களாக இருக்கும். இதனால், கேபினுக்குள் நன்கு விசாலமான இடவசதியை பெறலாம்.
ஏற்கனவே பொது சாலையில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் இவிஎக்ஸ் எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.22 லட்சம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த எலக்ட்ரிக் காரின் தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், 360-டிகிரி கேமரா, லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இவிஎக்ஸ் காரில் எதிர்பார்க்கிறோம்.
மாடர்ன் தோற்றத்தில் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரின் உள்ளேயும் க்ரோம் பிளாஸ்டிக்கால் ஆன சாஃப்ட்டான பேனல்கள் என சொகுசு அம்சங்கள் நிறைய இருக்கும். தற்போது கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள வேகன் ஆர் ஃபிளெக்ஸ் ஃப்யுல் காரை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இ20- இ85 எரிபொருளை ஏற்கக்கூடிய வகையில் மாடிஃபை செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.