சீனாவில் இருந்து ரூ.100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் இருக்கு சொல்லி! தொழிலாதிபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது
சென்னை காவல் ஆணையரிடம் தொழிலதிபர் மணிவண்ணன் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், நிலக்கரியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்த இருப்பதாகவும், இறக்குமதி செய்வதற்காக பணம் தேவைப்படுவதாக கூறி ரூ.3 கோடி பணத்தை மோசடி கும்பல் கேட்டுள்ளது. இதனை இரண்டு மடங்காக சுமார் 6 கோடி ரூபாயாக திருப்பி தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
இதனை நம்பி சிறிது சிறிதாக மோசடி கும்பலுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான நிறுவனம் போன்றே பல ஆவணங்களையும் மணிவண்ணனுக்கு காட்டி மோசடி அரங்கேற்றியுள்ளனர். மேலும் சொத்து ஆவணங்களும் அடமானமாக கொடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பணத்தை கொடுத்த பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், நிலக்கரியும் இறக்குமதி செய்யாமல் இருந்தது தெரியவந்து அதனை விசாரணை செய்தபோது தான் மோசடிக்குள்ளானது மணிவண்ணனுக்கு தெரிந்தது.
இந்த அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினார்கள். விசாரணையில் சுரேஷ் என்ற நபர் இந்த மோசடியில் முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை ரிப்பன் பில்டிக் அருகே சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.