தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்.பி.ஐ. வங்கி..!
முன்னதாக பாரத ஸ்டேட் வங்கி கோரியிருந்த காலக்கெடு நீட்டிப்பு மனுவை திங்கள்கிழமை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் செவ்வாய்கிழமை அலுவலக நேரம் முடிவடைவதற்குள் தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. கடந்த பிப். 15 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், வங்கி மூலம் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்து தீரப்பளித்தது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. ஸ்டேட் வங்கி ஜூன் 30 வரை காலக்கெடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பித்தனர். தேர்தல் ஆணையம் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.