பெங்களூரில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு.. பால் டேங்கர்கள் மூலம் தண்ணீர் சப்ளை..!!

கர்நாடகத் தலைநகர், இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மார்ச் 4 அன்று, பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார், பெங்களூருவில் தண்ணீர் தேவையை ரியல் டைம் அடிப்படையில் கண்காணிக்க அவசரகால அறையை அமைத்துள்ளோம். நகரில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களைத் தீர்க்க பிபிஎம்பி ஹெல்ப்லைன்கள் மற்றும் வார்டு வாரியாக குறைதீர்க்கும் மையங்கள் உள்ளன.
மூத்த அதிகாரிகளும் நானும் தனிப்பட்ட முறையில் தினமும் நிலைமையை கண்காணிப்போம். குடிமக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசின் கடமை, மக்கள் இனி கவலைப்படத் தேவையில்லை என தெரிவித்தார்.
இதனிடையே, புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) என்ற முனிசிபல் கார்ப்பரேஷன், ஆர்ஆர் மண்டலத்தில் உள்ள 5 வார்டுகள், பொம்மனஹள்ளியில் 10, மகாதேவபுரத்தில் 12 வார்டுகள், தாசரஹள்ளியில் 3, எலஹங்காவில் ஐந்து உட்பட 35 வார்டுகளில் 110 கிராமங்களில் நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.
இந்த 35 வார்டுகளில் வசிப்பவர்கள், மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பிபிஎம்பி வலியுறுத்தியுள்ளது. பிபிஎம்பி பதிவுகளின்படி, நகரில் 14,781 போர்வெல்கள் உள்ளன. அதில் 6,997 வறண்டு போய்விட்டன 7,784 செயல்படுகின்றன.
இன்னும் மாநகராட்சியில் பதிவு செய்யாத தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகளுக்கும் துணை முதல்வர் எச்சரிக்கை விடுத்தார். பெங்களூருவில் உள்ள 3,500 தனியார் தண்ணீர் டேங்கர்களில் 219 மட்டுமே இதுவரை பிபிஎம்பியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாதவை மார்ச் 7 ஆம் தேதிக்குப் பிறகு பறிமுதல் செய்யப்படும்.
தண்ணீர் அரசுக்கு சொந்தமானது. பெங்களூரு புறநகரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் ஏற்கனவே 210 டேங்கர்களை பயன்படுத்தி இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் தண்ணீர் விநியோகத்துக்கு இடையூறாக இருக்காது.
பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 556 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரத்தின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அந்தந்த தொகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பிபிஎம்பி ரூ. 148 கோடியும், இப்பிரச்னைக்கு தீர்வு காண குடிநீர் வழங்கல் வாரியம் ரூ. 128 கோடியும் ஒதுக்கியுள்ளது. தண்ணீர் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படாத பால் டேங்கர்களை பயன்படுத்த உள்ளோம்.
கர்நாடகா பால் பெடரேஷன் (கேஎம்எஃப்) பால் டேங்கர்கள் பெங்களூரில் தண்ணீர் விநியோகம் செய்வதற்கு முன் சுத்தம் செய்யப்படும். தண்ணீர் பற்றாக்குறை நீடிக்கும் வரை இந்த டேங்கர்கள் தண்ணீர் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும்.
தற்போது ரூ.500 முதல் ரூ.2,000 வரை உள்ள தண்ணீர் டேங்கர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய தனியார் டேங்கர் சங்கத்துடன் மார்ச் 7-ம் தேதி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சங்கத்துடன் ஆலோசித்து ஒரு கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
2024 மே மாதத்துக்குள் காவிரியின் 5 ஆம் கட்டத்தின் கீழ் 775 MLD பம்ப் செய்யப்படும். இது மே 2024 க்குள் முடிந்தவுடன் புறநகரில் உள்ள 110 கிராமங்களுக்கு பம்ப் செய்யப்படும். பெங்களூரு நகரம் கடுமையான தண்ணீர் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. எனவே, தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
தோட்டங்களுக்கும் கார் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார்.