அலறவைக்கும் வீட்டு வாடகை.. சென்னை மக்கள் புலம்பல்..!
வேலை, கல்வி என பல காரணத்திற்காக பெரு நகரங்களுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி , குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் மக்கள்தொகை அதிகமாகி வருகிறது.
பெரு நகரங்களில் குடியேரும் 100-க்கு 95 பேர் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர். இந்த வாடகை வீடு தான் பெரும்பகுதி மக்களின் பெரும் நிதிசுமையாக மாறி வருகிறது. இதனாலேயே பலர் பெருநகரங்களுக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள்.
வாடகை வீட்டுக்கான தேவை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நகரங்களில் வீட்டு வாடகையும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த ஓராண்டில் வீட்டு வாடகை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து ரியல் எஸ்டேட் தளமான மேஜிக் பிரிக்ஸ் தரவுகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 13 முக்கிய நகரங்களில் கடந்த ஓராண்டில் வீட்டு வாடகை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேஜிக் பிரிக்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தேசிய தலைநகரான டெல்லியின் புறநகர் பகுதியாக கருதப்படும் குருகிராமில் வீட்டு வாடகை ஒரே ஆண்டில் 31.3 சதவீதம் உயர்ந்துள்ளது அதேபோல கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு வாடகை 30.4% என்ற உச்சத்தை அடைந்துள்ளது.
ஐடி சிட்டி என அறியப்படும் பெங்களூருவில் 23.1 சதவிகிதம் என்ற அளவில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது. மும்பையில் 16 சதவிகிதம், ஹைதராபாத்தில் 20.7 சதவிகிதம், தானேவில் 17.8 சதவிகிதம் என வாடகை அதிகரித்துள்ளது.
சென்னையில் வாடகை: சென்னையில் வீட்டு வாடகை கடந்த ஓராண்டு காலத்தில் 14.7% உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சராசரியாக இந்தியாவில் ஓராண்டில் மட்டும் 17.4% வாடகை அதிகரித்துள்ளது.
வாடகை வீடுகளுக்கான தேவை எப்படி உள்ளது: கடந்த ஓராண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளுக்கான தேவை குறித்தும் மேஜிக் பிரிக்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன் படி, கிரேட்டர் நொய்டாவில் ஓராண்டில் தேவை என்பது 6.9% அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை இரண்டாமிடத்தில் உள்ளது. சென்னையில் ஓராண்டில் வாடகை வீடுகளுக்கான தேவை என்பது 4.1% என அதிகமாகியுள்ளது.
அகமதாபாத், டெல்லி, குருகிராம்,ஹைதராபாத், மும்பையில் வாடகை வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பெங்களூரு, கொல்கத்தா, தானேவில் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் வாடகைக்கு வீடுகள் தேவை 1.6% குறைந்துள்ளது.
சப்ளையும் பெருமளவில் குறைவு: வீடுகள் சப்ளையை பொறுத்தவரை பெரியளவில் அதிகரிக்கவில்லை. நாட்டில் ஒட்டுமொத்தமாக வீடுகள் சப்ளை ஓராண்டில் 16.9% குறைந்துள்ளது. அதிகபட்சமாக நவி மும்பையில் 38% குறைந்துள்ளது..
இதை தொடர்ந்து தானேவில் 33.6% சப்ளை சரிந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது. அதாவது சென்னையில் ஓராண்டில் வீடுகளின் சப்ளையானது, 33.3% குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் , வாடகை வீடுகளின் தேவை கணிசமாக குறைந்துள்ளது, வரும் நாட்களில் தேவை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்கின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.பெரும்பாலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, இவற்றுக்கான மாத வாடகை சராசரியாக 10,000 இல் இருந்து 30,000ஆக இருக்கிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.