செம சூடு… திடீரென தீப்பிடித்து கையைப் பொசுக்கிய ஐபோன் சார்ஜர்!

பெரும்பாலான மக்கள் ஆப்பிள் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் உயர்தரத்தை நம்பி ஐபோன் வாங்குகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கும் வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் தனது ஐபோன் 15 சார்ஜரை இரவில் சார்ஜ் செய்தபோது தீப்பிடித்ததாகக் கூறுகிறார்.

வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் சூட்டில் உருகிய சார்ஜரையும் காட்டுகிறார். புகார் கூறியுள்ள ஜாஸ்மின் அலுவாலியா என்ற பெண், சூடான சார்ஜர் தனது கையைச் சுட்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். தூங்கிக் கொண்டிருந்தபோது, ஏதோ எரிவது போல நாற்றம் வருவதை உணர்ந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் சார்ஜரைப் பார்த்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் அவர் சொல்கிறார்.

ஜாஸ்மின் அலுவாலியாவின் வீடியோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெட்டிசன்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஜாஸ்மின், “நான் சார்ஜில் இருக்கும்போது எனது ஐபோனைப் பயன்படுத்தினேன். திடீரென்று கேபிள் எரியத் தொடங்கியது. அப்போதுதான் சேதம் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது” எனக் கூறியுள்ளார்.

மேலும், “உறங்கும்போது உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டாம். அது மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். ஆப்பிள் தனது புதிய போன்களை விற்பனை செய்வதற்கு முன் மீண்டும் தரச் சோதனையை மேற்கொள்ள வேண்டும்” என அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பதிவுக்கு ரிப்ளை செய்துள்ள இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “யாராவது ஐபோன் 15 ஐ வாங்கினால் 1500 ரூபாயை சேமிப்பதற்காக ஒருபோதும் இப்படி ரிஸ்க் எடுக்கமாட்டார்… சார்ஜர் மற்றும் வயர் இரண்டும் அசலாகவே இருக்கும்… நீங்கள் அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோரைத் தேடி, அவர்களிடம் மாற்று கேபிளைக் கேட்க வேண்டும். மொபைலையும் சரிபார்க்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான அலுவாலியாவின் புகாரை பலர் சந்தேகித்துள்ளனர். அவர் ஒரு போலி சார்ஜரைப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று பதிவிட்டுள்ளனர். “கேபிள் லோக்கல், அடாப்டர் ரெட்மி… ஐபோன் 15 இல்லை… பார்ப்பவர்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள்” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிலர் தங்களுக்கும் இதேபோல அனுபவம் ஏற்பட்டிருக்கிறது என்று ஜாஸ்மின் கூறிய புகாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். “எனது ஐபோன் 11 சார்ஜருக்கும் இதேதான் நடந்தது. நான் ஆப்பிள் ஸ்டோரில் புதிய கேபிளை வாங்கியிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், “எனக்கும் இதே விஷயம் நடந்தது. எனது மொபைல் ஒரிஜினலா போலியா என்று நான் குழப்பமடைந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.

ஐபோன் சார்ஜர் தீப்பற்றி எரிந்ததாகத் தெரியவருவது இது முதல் முறையல்ல. முன்னதாக ஜனவரியில், ஓஹியோவில் ஐபோன் சார்ஜர் தீப்பற்றியதாக புகார் வந்தது. அதிர்ஷ்டவசமாக சிறிய அளவில் எரிந்தபோதே தீ அணைக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *