தென்காசி-யில் செமிகண்டக்டர் டிசைன் திட்டம்.. ZOHO ஸ்ரீதர் வேம்பு டிவிட்டர் பதிவு..!!
தென்காசியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் செல் பிரிவின் தலைவர் அனந்தன் அய்யாசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட செய்திக்கு, ஜோஹோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்கள் முக்கியமான பதில் அளித்துள்ளார்.
அந்த பதிவில், “தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில், தென்காசியில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி செய்ய நான் முழு மனதுடன் பாடுபடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அனந்தன் அய்யாசாமி.
அனந்தன் அய்யாசாமி முன்னாள் இன்டெல் நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பிஜேபி ஸ்டார்ட்-அப் பிரிவின் தலைவர் ஆவார், மேலும் இவர் தனது பதிவில் “தொழில்நுட்ப வளர்ச்சியை எங்கள் பகுதிக்குக் கொண்டு வருவதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன்” என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, “தென்காசி-க்காக அனந்தன் ஆற்றியுள்ள பணிகளை நான் அறிவேன். அவரது கண்ணியம், பணிவு, கட்டுப்பாடு மற்றும் கொள்கை மீதான உறுதி ஆகியவை பாராட்டத்தக்கவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தென்காசியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு திட்டத்தை நாங்கள் நீண்ட காலமாக பேசிக்கொண்டு வருகிறோம். இந்த துறையில் அனந்தன் அய்யாசாமியின் நிபுணத்துவம் அளப்பரியது” என்று அவர் கூறியுள்ளார்.
ZOHO ஸ்ரீதர் வேம்பு தனது நிறுவனத்தின் கிளைகளைத் தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்தது மூலம் டெக் துறை வல்லுனர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கடந்த 5 வருடத்தில் பெரிய அளவில் பிரபலமானார்.
ஆனால் அவ்வப்போது அவருடைய டிவிட்டர் பதிவுகள் மூலம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார், சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவருடைய பதிவை விமர்சனம் செய்தது மறக்க முடியாது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களிலும், உத்தரப்பிரதேசத்திலும் புதிய கிளை அலுவலகங்களைத் திறக்க ஜோஹோ நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. Zoho நிறுவனம் 2023-ம் ஆண்டிற்கான (FY23) ஒருங்கிணைந்த வருவாயாக ரூ.8,703 கோடி ஐ பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகமாகும்.