மூத்த குடிமக்களே முதல்ல இதை படிங்க.. வரி சேமிப்பில் இதை மறந்திடாதீங்க..!
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரியை சேமிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மூத்த குடிமக்கள் எவ்வாறு அதிகப்படியான வரியை சேமிக்க முடியும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அதிகபட்ச வரிவிலக்கு : 60 முதல் 80 வயது உடைய மூத்த குடிமக்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் என அதிகபட்ச வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் என வரிவிலக்கு வரம்பு உள்ளது. எனவே மூத்த குடிமக்கள் எளிதாக வரியை சேமிக்கலாம்.
பிரிவு 80TTBஇன் கீழ் வரி விலக்கு : வங்கிகள் ,கூட்டுறவு சங்கங்கள் அல்லது தபால் நிலையங்களில் வைக்கப்படும் வைப்புத் தொகையின் மீதான வட்டிக்கு மூத்தக்குடி மக்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம் என வருமான வரி சட்டத்தின் பிரிவு 80TTB அனுமதிக்கிறது .இந்த விலக்கு 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் விலக்கை காட்டிலும் அதிகம்.
நிலையான விலக்குகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் :2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நிலையான விலக்குகளில் மூத்த குடிமக்கள் பயனடையலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள் வேலையில் இல்லாவிட்டாலும் கூட இது வரிச் சுமையை குறைக்க உதவுகிறது.
மருத்துவ காப்பீட்டு ப்ரீமியம்: மூத்த குடிமக்கள் 80டி பிரிவின் கீழ் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்களுக்கு அதிக விலக்குகளை பெறலாம் .தங்களுக்கு அல்லது தங்கள் வாழ்க்கைத் துணைக்கு செலுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு ப்ரீமியங்களுக்காக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரிச்சலுகை கோரலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் : இது அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அரசின் சேமிப்பு திட்டமாகும். ஒரு நிலையான வட்டி விகிதத்துடன் பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு வழியை வழங்குகிறது .8.20% வட்டியுடன் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை பெற உதவுகிறது.
வருங்கால வைப்பு நிதி: பிபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்புகளை செய்யும்போது 80சி பிரிவின் கீழ் வரி விலக்குகளை பெறலாம். அதே போல தேசிய சேமிப்பு பத்திரத்திலும் மூத்த குடிமக்கள் 80சி பிரிவின் கீழ் வரி சலுகைகள் பெற முடியும்.
வரி சேமிப்புக்கான நிலையான வைப்புத்தொகை: வங்கிகள் வழக்கமாக வழங்கும் நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்யலாம். 80சி பிரிவின் கீழ் இதில் வரி சலுகைகளை பெறலாம்.
இந்த வழிமுறைகளை பயன்படுத்தி மூத்த குடிமக்கள் எளிதான முறையில் வரி விலக்குகளை பெற முடியும். உங்கள் பெற்றோரின் பெயரில் கூட இத்தகைய சேமிப்பு முறைகளை பின்பற்றி வரியை சேமிக்கலாம்.