மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
2023-24ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி சலுகைகளை பெற, வரும் 31ஆம் தேதிக்குள் முதலீடுகளை செய்ய வேண்டும். எனவே என்ன மாதிரியான முதலீடுகள் நமக்கு பெரிய அளவில் வரியை சேமித்து கொடுக்கும் என்ற ஒரு வித குழப்பம் ஏற்படும் காலமிது.
மூத்த குடிமக்களை பொறுத்துவரை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அல்லது வங்கிகளில் வைக்கப்படும் நிலையான வைப்புத்தொகை திட்டம் எது அதிகபட்ச வரி சலுகையை பெற்று தரும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வட்டி எவ்வளவு: 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி தருகிறது. அதே வேளையில் நிலையான வைப்புத்தொகை திட்டங்கள் 6.5% முதல் 8% வரைவிலான வட்டி தருகின்றன. வரி சேமிப்புக்கான 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் யெஸ் வங்கி தான் அதிகபட்சமாக 8% வட்டி தருகிறது. ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள்7.75% வட்டி வழங்குகின்றன.
திட்டத்தின் காலம்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது 5 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட திட்டமாகும். ஆனால் 5 ஆண்டுகள் முடிவில் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே வேளையில் வரி சலுகை வழங்கும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களும் 5 ஆண்டுகள் லாக் இன் பிரீயட் கொண்டவை.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச முதலீடு: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆனால் இதற்கு ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு கோர முடியும். அதே போல நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் குறைந்த பட்சம் 1,000 முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
வரி விதிப்பு முறை: இரண்டு திட்டங்களிலுமே , வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை கோர முடியும். ஆனால் அந்த நிதியாண்டில் செய்த முதலீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். இந்த திட்டங்களில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி விதிக்கப்படும். ஓராண்டுக்கான மொத்த வட்டி வருவாய் ரூ.50,000ஐ கடந்தால் டிடிஎஸ் பிடிக்கப்படும்.
அரசின் பாதுகாப்பு: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடுக்கு பாதுகாப்பு உண்டு. வங்கிகளில் செய்யப்படும் நிலையான வைப்புத்தொகை முதலீடுகளும் பாதுகாப்பானவையே.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்த்யால் 1% வட்டி குறைக்கப்பட்டு பணம் வழங்கப்படும். ஆனால் வரி சேமிப்புக்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணத்தை எடுக்க முடியாது.அதிக வட்டி, 5 ஆண்டுகளுக்கு முன்னரே பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றுடன் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் சிறப்பான திட்டமாக இருக்கிறது.