காணும் பொங்கல் தினத்தில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!
உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்று புதிய வரலாற்று உச்ச அளவான 73427.59 தொட்டுப் பதிவு செய்த நிலையில், இன்று 1400 புள்ளிகள் சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடுகள் பெரும் சரிவுடன் வர்த்தகம் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகம் துவங்கியதில் இருந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துவிட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1371.23 புள்ளிகள் சரிந்து 71,757.54 புள்ளிகளைத் தொட்டது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்து, ஆனால் இந்தச் சரிவு அடுத்த சில நிமிடத்திலேயே பாதியாகக் குறைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு பெரும் சரிவுக்குப் பின்பு தற்போது 759.26 புள்ளிகள் சரிந்து 72,369.24 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்கள் பட்டியலில் 18 நிறுவனங்கள் சரிவில் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி பங்குகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிசம்பர் காலாண்டு முடிவில் இதன் நிகர லாபம் கடந்த வருடத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட 34% உயர்ந்து ரூ.16,372.54 கோடியாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் நிகர வட்டி வருமானம் வருடாந்திர அடிப்படையில் 24% அதிகரித்து ரூ.28,471.34 கோடியாக உள்ளது. இதேவேளையில்பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரான் நாட்டின் சிறப்பு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் அவசர மறுசீரமைப்பில் இறங்கியுள்ளனர்.இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் சர்வதேச பிரச்சனைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் மீண்டும் பத்திர சந்தை நோக்கிச் செல்ல துவங்கும் நிலையும் உருவாகியுள்ளது.